ஐ.நா. அதிகாரிகள் மாவையுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதரகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குழுவினருக்கும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
யாழில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது வடக்கு மாகாண அரசியல் நிலவரங்கள், ஆட்சி மாற்றத்தின் பின்னான சிவில் நிர்வாக கட்டமைப்புகளின் செயற்பாடுகள், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் கள நிலவரங்கள் தொடர்பில் ஐ.நா. அதிகாரிகள், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் கேட்டறிந்தனர்.
இதேவேளை, ஐ.நா. அகதிகளுக்கான தூதரகத்தின் வதிவிடப் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானத்தை நேற்று சந்தித்திருந்தனர்.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை பேரவை செயலகக் கட்டட தொகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது போரின் பின்னர் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஆட்சி மாற்றத்தின் பின் வடக்கு நிலமைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.