இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்றுள்ளது.
இனியும் விதண்டாவாதக் கதைகளைப் பேசிக்கொண்டிருக்காமல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுத் தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
“சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன், 36ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப உரையில் கூறியிருந்தார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது:
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசும் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றியிருந்தது. அந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றுதற்கு தமக்கு இரண்டு வருட கால அவகாசத்தையும் கேட்டு வாங்கிக்கொண்டனர். 2019ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பரிந்துரைகளையும் நிறைவேற்றவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அரசுத் தலைமை, விதண்டாவாதக் கதைகளை கதைத்துவருகின்றது. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறுதான் இலங்கை அரசை நாம் கோருகின்றோம்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் விடுத்த இறுதி எச்சரிக்கையை மனதிலிருத்தியாவது நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை அரசு தற்போதுள்ள மந்தப் போக்கில் தொடர்வது மாபெரும் தவறு” – என்றார்.