இலங்கையின் செயற்பாடுகள் மகிழச்சியளிக்கும் வகையில் இல்லை: ஐ.நா. குற்றச்சாட்டு
இலங்கையில் நிலைமாறுகால பொறிமுறை தொடர்பான செயற்பாடுகளின் வேகம் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமையவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன், தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான அடிப்படை விடயங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இன்ற இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்ப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தேவையான அடிப்படைகளில் ஒன்றான, கடந்த கால குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பான விடயங்கள் ஆரோக்கியமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.
இலங்கையில் காணப்படுகின்ற அரசியல் சூழ்நிலைகள், பொறுப்பு கூறுதல் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. பொறுப்புகூறல் விடயத்தில் ஆளும் தரப்பினர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மனித உரிமை விவகாரம் மற்றும் அரசியல் சாசன விவகாரங்களில் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதனை மறுப்பதற்கில்லை, அது வரவேற்கப்பட வேண்டியதாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்புக்களுடன் இலங்கை காத்திரமான உறவுகளைப் பேணி வருகின்றமை வரவேற்கப்பட வேண்டியதாகும். காணி மீளளிப்பு, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் போன்ற முயற்சிகள் அங்கீகரிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.
எவ்வாறெனினும், பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றுக்கு மிகவும் சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை இலங்கை சரியான முறையில் பயன்படுத்தி நீதியை நிலைநாட்டவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்க வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.