டிரம்பின் புதிய விசா தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் புதிய ‘விசா’ தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் ஈரான், ஈராக், சோமாலியா, லிபியா, சூடான், ஏமன் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகள் மீது 90 நாட்கள் விசா தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அனைத்து அகதிகளும் நுழைய தற்காலிக தடையும் விதித்து இருந்தார்.
இந்த உத்தரவுக்கு அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்காவில் விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். பெடரல் கோர்ட்டுகளில் இந்த உத்தரவுக்கு தடை பெறப்பட்டது.
அதை தொடர்ந்து புதிதாக விசா தடை உத்தரவை சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் பிறப்பித்தார். அதில் ஈராக் நாட்டுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது.
சிரியா, சூடான், லிபியா, ஏமன், ஈரான் ஆகிய 6 நாடுகளுக்கான விசா தடை தொடர்ந்து நீடிக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அமெரிக்காவின் பாதுகாப்பை கருதி கொண்டு வரப்பட்டது என டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு வருகிற 16-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் அமெரிக்க மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நியூயார்க், வாஷிங்டன், ஒரிகான், மசாசூசெட்ஸ், ஹவாய் உள்ளிட்ட மாகாண கோர்ட்டுகளில் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த புதிய உத்தரவு மற்றொரு பெயரில் முஸ்லிம்களுக்கான தடையாகும். இதன் மூலம் தனது அரசின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்த அவர் நினைக்கிறார் என நியூயார்க் அட்டர்னி ஜெனரல் எரிக் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இத்தகைய வழக்குகளில் வெற்றி பெறுவோம் என வெள்ளை மாளிகை நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.