கடிதத்தில் கையெழுத்து : கூட்டமைப்பிற்குள் குழப்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஸ்ரீலங்காவிற்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கோரியும், வழங்கக் கூடாது என்று கோரியும், அனுப்பப்பட்ட மனுக்களில் போலியான கையெழுத்துகள் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில், கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்பட்டது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கக்கூடாது என்று தெரிவித்து அனுப்பி வைக்கப்பட்ட இந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள கையெழுத்துக்கள் தம்முடையவை அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறீஸ்கந்தராசா, ஜீ.ஸ்ரீநேசன் மற்றும் கே.கோடீஸ்வரன் ஆகியோர் தெரிவித்திருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, துரைரட்ணசிங்கம், சரவணபவன் ஆகியோர் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஜெனீவாவில் ஸ்ரீலங்கா அரசுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி, சிவில் சமூக அமைப்புகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு கடிதத்தில், தம்முடைய பெயர்களும் இடம்பெற்றிருப்பதாகவும், ஆனால் அந்த மனுக்களுக்கு தாம்ஒப்புதல் தெரிவித்திருக்கவில்லை என்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
பேராசிரியர் குமார் டேவிட், அருட்தந்தை செபமாலை அடிகளார், அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் உள்ளிட்டவர்கள் இந்த மனுவில் தாம் கையெழுத்திடவில்லை என்று கூறியுள்ளனர்.