யாழ்ப்பாணம் மீசாலைப்பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 4:00மணியளவில் மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், கணவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
சாவகச்சேரியில் இருந்து கொடிகாமம் நோக்கி வயோதிப தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற சமயம் வீதியின் ஓரத்தில் நின்ற காரின் சாரதி கார் கதவினை திடீரென திறந்த போது இவர்கள் இருவரும் கதவில் மோதி வீதியில் விழுந்ததாகவும் இதன் போது பின்னால் வந்த டிப்பர் பெண்மணியை மோதித் தள்ளியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீசாலை வடக்கைச் சேர்ந்த 62 வயதான சந்திரபாலன் பரமேஸ்வரி என்ற பெண்னே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.அவரது கணவர் 67வயதான சின்னையா சந்திரபாலன் தலையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைக்கும் சாவகச்சரி பொலிஸ் பொறுப்பதிகாரி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.