மூதூர் – பெரியவெளி, மல்லிகைத்தீவில் மூன்று பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அங்கு பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் மாலைநேர (பிரத்தியேக) வகுப்புக்குச் சென்ற மூன்று மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
மல்லிகைத்தீவு பாடசாலை கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்களுள் சிலர் இம்மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் என்று அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர்கள் உடனே தலைமறைவாகினர். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இருவரை அப்பிரதேச மக்கள் கட்டிவைத்தனர். இதனால் அப்பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை பதற்றம் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வந்த பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட 10,13 வயதுகளையுடைய மாணவிகள் மூவரும் மூதூர் வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் மாலை சேர்க்கப்பட்டனர். இவர்கள் மேலதிக பரிசோதனைக்காக நேற்றுக் காலை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இதனைக் கண்டித்து நேற்று திருகோணமலை – மட்டக்களப்பு பிதான வீதியில் காலை 9 மணியிலிருந்து சுமார் 5 மணித்தியாலயங்களுக்கு மேல் போக்குவரத்தை மறித்து மல்லிகைத்தீவு சந்தியில் கிராம மக்கள் அனைவரும் இணைந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுியில் உள்ள 5 பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் ஆகியோர் பொதுமக்களுடன் பேசினர். அதன்பின்னர் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும், பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதியும் கிடைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை இங்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் தெரிவிக்கப்பட்டது. 3 நாட்களில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள் எனப் பொலிஸாரால் வாக்குறுதி வழங்கப்பட்டது.
“பொலிஸாரால் இதுவரை கைதுசெய்யப்பட்ட 4 சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன. குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்காக மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் பெயர்கள் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். எனவே, அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை பொலிஸாரால் அதிதீவிரமாக இடம்பெற்று வருகின்றது” என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த போராட்டம் பிற்பகல் 2 மணியளவில் நிறைவடைந்தது. மூன்று நாட்களில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படாவிட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று மக்கள் தெரிவித்தனர்.