மீண்டும் இனவாதம் தோன்றும் தேரர்!
தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்கி, அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ் முஸ்லிம் புதிய அரசியல் தலைவர்களை அதற்குள் உள்ளவங்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் இனவாதத்தை கக்கியுள்ளார்.
பொதுபல சேனாவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் , தனி சிங்கள பௌத்த தலைவர் தெரிவு செய்ததை போன்று தனி சிங்கள அரசாங்கமும் தோற்றம் பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்ட நேரத்தில் இருந்து , இன்று வரையில் தான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என்பதை பலசெயற்பாடுகளின் ஊடாக அவர் நிரூபித்துள்ளதாகவும் தேரர் கிலாகித்துள்ளார்.
எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய தேரர், ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையினை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பினையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தின் பாரம்பரிய முறைமைகளே பல நெருக்கடிகளுக்கும், அரச நிர்வாகத்திற்கும் தடையாக உள்ளதாகவும் எனவே உருவாகும் தனிச் சிங்கள அரசாங்கத்தில் அடிப்படைவாத கொள்கைகளற்ற தமிழ், முஸ்லிம் இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசியல்வாதிகள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.