‘‘உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களிடம் வசதி இருப்பதில்லை. வசதி இருப்பவர்கள் உதவி செய்வதில்லை. இவ்வாறான சமூகத்திலேயே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.’’
இவ்வாறு வடக்கு மாகாண மக ளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு தின நிகழ்வு யாழ்ப்பாண நகர விடுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாண விழிப்புணர்வற் றோர் சங்கம் 40 வருடமாக சேவையை வழங்கிக்கொண்டு வருகின்றது. இந்தச் சங்கத்துக்குப் பல நிறுவனங்கள் உதவிகளை வழங்கிவருகின்றன.
பிறப்பிலே மாற்றுத்திறனாளிகள் ஆனோரை விட போர் காரணமாக மாற்றுத்திறனாளிகள் ஆன பல்லாயிரக்கணக்கானோர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் மற்றும் கல்வி என்ற வகையில் இலங்கை அரசு பொதுவேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
போர் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்தும் இலங்கை அரசு இவர்களுக்காக வாழ்வாதார பொது வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படாமை கவலைக்குரியது – என்றார்.