நீண்டகாலப் போரால் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்த மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தக் கூடிய மாற்றங்கள் இன்னமும் ஏற்படவில்லை – என அமெரிக்க மிசன் திருச்சபையின் முன்னாள் தலைவர் அருட்தந்தை ஈனோக் புனிதராஜ் தெரிவித்தார்.
அராலி தேவாலயத்தில் புதுவருட நள் ளிரவுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்து மறையுரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் ஆயுதமோதல் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து எதிர்வரும் எட்டாம் திகதியுடன் நான்காவது வருடத்தில் கால்பதிக்கிறது. தற்போதைய அரசு பௌதிக ரீதியான ஒருசில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்றுகூடுவதற்கும், கருத்துகளை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம் ஓரளவு ஏற்பட்டிருக்கின்றது.
தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை சட்டரீதியான அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றது. உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. போரினால் இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலிப்பதற்கான சூழ்நிலையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.