நாட்டிலுள்ள 9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தம் – மீண்டும் இனவாதத்தை தூண்டும் தேரர்
ஒன்பது மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை.
இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, பெளத்த மதத்துக்கென ஏற்கனவே இருக்கும் இடங்களுக்கு மேலாக ஓர் அடி நிலத்தைக்கூட கிழக்கில் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பில் ஞானசார தேரர் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள 9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. அதாவது முழு நாடும் பெளத்த சிங்கள பூமி. இதை நான் பல தடவைகள் எடுத்துரைத்துள்ளேன். வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் என்பதற்காக அந்த மாகாணங்களை தமிழ்பேசும் மக்களின் சொந்தத் தாயகமாக அங்கீகரிக்க முடியாது. வடக்கு, கிழக்கு நிலங்களை அவர்களின் சொந்த நிலங்களாகக் கருத முடியாது.
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தையில் தமிழ்பேசும் மக்கள் கூடுதலாக வாழ்கின்றார்கள் என்பதற்காக அந்தப்பிரதேசத்தை தமிழ்பேசும் மக்களுக்குச் சொந்தமானது என்று கூற முடியுமா? கிழக்கில் தொல்பொருள் இடங்களை அடையாளங்காண்பதற்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியை நாம் வரவேற்கின்றோம். அதேபோல் வடக்கிலும் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட வேண்டும். அங்குள்ள பெளத்த சிங்கள புராதனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.