மகிந்தவைப் பாதுகாப்பதில் எமக்கு இலாபம் உள்ளது. அவரது பாதுகாப்புக்கு எந்தக் குந்தகம் ஏற்படவும் நாம் அனுமதியளிக்க மாட்டோம். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில், கூட்டு எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன வின் கோரிக்கைகுப் பதிலளிக்கையிலேயே ரணில் இவ்வாறு தெரிவித்தார்.
‘‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவிருக்கும் சூழ்நிலையில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்ளும் பரப்புரைக் கூட்டங்களில் மகிந்த ராஜபக்ச பங்கெடுப்பார். அவருடைய பாதுகாப்புக்கு காணப்படும் அச்சுறுத்தலை கவனத்திற்கொண்டு சிறப்புப் பாதுகாப்பு பிரிவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அவசர நிலமையொன்று ஏற்படும்போது அவருக்குப் பாதுகாப்பு வழங்க இந்தப் பிரிவு அவசியமாகவுள்ளது. இந்திய தலைமை அமைச்சராக இருந்த ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமையாலேயே அவரை இலக்குவைத்துக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உடனடியாக அதிகரிக்கப்படவேண்டும்’’ என்று தினேஸ் குணவர்த்தன கேட்டுக்கொண்டார்.
அதற்குப் பதிலளித்த தலைமை அமைச்சர் ரணில் தெரிவித்ததாவது: முன்னாள் அரச தலைவர்களின் பாதுகாப்புக்குக் காணப்படும் அச்சுறுத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் புலனாய்வுதுறையின் அறிக்கைகளுக்கு அமையவே அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக் குறித்து தீர்மானம் எடுக்கப்படுகின்றது.