பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக அமெரிக்கா அறிவித்ததை வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது.
வடகொரியாவின் தொடர் அணுகுண்டு சோதனைகள் சர்வதேச நாடுகளின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்க, அமெரிக்கா-வடகொரியா இடையேயான கருத்து மோதல் முற்றி, போர் ஏற்படும் நிலைக்கு வந்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னிற்கும் இடையேயான கருத்து மற்றும் கிண்டல் மோதல்களும் உச்சத்தை எட்டி வருகிறது.
இந்நிலையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவை அமெரிக்கா மீண்டும் சேர்த்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா மீது மேலும் சில புதிய தடைகளை விதிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார். அவரது இந்த முடிவை ஜப்பான் வரவேற்றது.
அமெரிக்காவின் அறிவிப்பால் கடும் எரிச்சல் அடைந்துள்ள வடகொரியா, அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து வடகொரியா அதிகாரி கூறுகையில், பயங்கரவாதத்துக்கும் வடகொரியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அமெரிக்கா அறிவித்தது பற்றி எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அமெரிக்காவின் இந்த அறிவிப்பானது, வடகொரியா தன்னை பாதுகாத்துக்கொள்ள மேலும் தீவிரமாக செயல்பட வேன்டும் என்பதை காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.