“அதிகாரங்களை உச்சபட்சம் பகிர்வதற்கு கூட்டு அரசு இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் கூறியுள்ளார். அது வெறும் வாய்மொழியில் அல்லாமல் நடைமுறையில் வரவேண்டும்.”
– இவ்வாறு யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, அதியுச்ச அதிகார பகிர்வினை வழங்க கூட்டு அரசு இணங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அதியுச்ச அதிகார பகிர்வு என்பது வரவேற்கப்பட வேண்டும். அரசின் இந்த முயற்சியை நாம் பாராட்டுகின்றோம்.
வெறும் வாய் மொழியாக மட்டுமல்லாமல், முறையாக இதனை ஆவணம் செய்து சட்டரீதியாக நடைமுறைப்படுத்தும் போது தான் அதற்கான முழு வெற்றியை அரசு பெற்றுக்கொள்ள முடியும்” – என்றார்.