“தமிழ் மக்கள் விரும்பாத தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது. தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யும் தீர்வை அடைவதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், மன்னார் மாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையிடம் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தைப் பாராட்டுகின்றேன். அரசியல் அமைப்பு முயற்சி வெற்றிபெற எமது ஆசிகள் என்றைக்கும் இருக்கும்” என்று இதன்போது மன்னார் ஆயர் கூறினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் இன்று திறந்துவைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்றே மன்னார் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மன்னார் மாவட்ட ஆயரைச் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.
“தற்போது இடைக்கால அறிக்கையே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எமது மக்கள் விரும்பாத தீர்வு அடங்கிய அரசமைப்பை நாம் ஏற்கப்போவதில்லை. தமிழ் மக்கள் ஏற்கும் தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளே தொடர்கின்றன. அதற்காக நாம் தொடர்ந்தும் முழு அளவில் முயற்சிக்கின்றோம்” என்று மன்னார் ஆயரிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக்கூறினார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தைப் பாராட்டுகின்றேன். அரசமைப்பு முயற்சி வெற்றிபெற எமது ஆசிகள் இருக்கும். எமது மக்களுக்கான அரசியல் உரிமையைப் பெறும் முயற்சிக்கும் எமது முழுமையான ஒத்துழைப்புக்களும் ஆசியும் இருக்கும்” என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகையையும் சந்தித்து ஆசிபெற்றார்.