காணாமல்போனோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 40ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலிறுத்தி உறவினர்கள் தமிழர் தாயகத்தில் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்தப் போராட்டம் வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களில் இன்றும் தொடர்கின்றது.
“உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எம்மை வீதியில் விட்டு வேடிக்கை பார்ப்பதை விடுத்து தீர்வைப் பெற்றுத் தரவேண்டும்” என்று காணாமல்போனோரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உறவினர்கள் உறுதியுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்துக்கான ஆதரவும் வலுவடைந்து வருகின்றது.
இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 40 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெறுகின்றது. வவுனியா மாவட்டத்தில் இன்று 36 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது. முல்லைத்தீவில் நடக்கும் போராட்டமும் இன்று 24 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
யாழ்ப்பாணத்தில் மருதங்கேணியில் இன்று 17ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கிழக்கில் திருகோணமலையில் இன்று 27 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.