“ஐயோ, எனது முழுக் குடும்பமுமே குப்பைமேட்டுக்குள் புதைந்து சிதைந்துபோயுள்ளது. பேரன் மட்டுமே உயிருடன் இருக்கின்றான். வாழ்வதற்காக முன்னெடுக்கப்பட்ட எனது போராட்டம் மரணத்தில் முடிந்துவிட்டதே…”
– இவ்வாறு கண்ணீர்மல்க கருத்து வெளியிட்டுள்ளார் மீதொட்டமுல்ல குப்பைமேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளராகச் செயற்பட்ட என்.கீர்த்திரத்ன.
மீதொட்டமுல்லயில் குப்பைகொட்ட வேண்டாமென முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை எல்லாம் இவரே தலைமையேற்று நடத்தியிருந்தார். இதனால், பொலிஸாரின் கொட்டன், பொல்லுத் தாக்குதல், கண்ணீர்ப் புகைகுண்டுத் தாக்குதல்ஆகியவற்றுக்குள் உள்ளாகியிருந்தார்.
எவ்வளவுதான் நெருக்கடிகள் – அழுத்தங்கள் வந்த போதிலும் மக்களுக்கான போராட்டத்தை அவர் கைவிடவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், குப்பைமேட்டுக்குள் சிக்கி கீர்த்திரத்னவின் மகள், மருமகன், பேத்தி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவரது மனைவியும் உயிரிழந்துவிட்டார். தற்போது அவருக்கென மகளின் மகன் (பேரன்) மாத்திரமே மிஞ்சியுள்ளார்.
உறவினர்களுக்கு இறுதிக்கிரியைகள் நடைபெறும்போது துயரம் தாங்க முடியாமல் அவர் மயங்கி விழுந்துவிட்டார். அத்துடன் அரசியல்வாதிகள் மீதும் அவர் கடும் சீற்றத்துடனேயே இருக்கின்றார்.
“குப்பைகொட்டி எங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிவிடாதீர்கள் என அழுது புலம்பினோம். கெஞ்சிக்கூடப் பார்த்தோம். எமது கோரிக்கைகள் கணக்கில் எடுக்கப்படவில்லை. ஒரு கிராமத்தின் வாழ்வுக்காக நான் ஆரம்பித்த போராட்டம் இந்த மரணங்களுடன் முடிவுக்கு வந்துள்ளது.
பேரன் மட்டும் இல்லாவிட்டால், தற்கொலை குண்டுதாரியாகச் சென்று அரசியல்வாதிகளை அழித்துவிடுவேன்” என்று அவர் கடும் சீற்றத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அனர்த்தத்தில் உயிரைப் பலிகொடுத்தவர்களுள் பலரின் மனநிலைமை இப்படிதான் இருக்கின்றது.