கண்டி, வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள சிரிமல்வத்தை நவோதயப் பாடசாலையின் நேற்றுக் கூரை உடைந்து விழுந்ததில் 26 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
தரம் 5 வகுப்பில் நடந்த இவ்விபத்தில் இயற்கைக்கடன் கழிக்கச் சென்ற ஒரு மாவணைத்தவிர ஏனைய அனைவரும் காயமடைந்து கண்டி வைத்திய சாலையின் 70ஆம் வார்ட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த பாடசாலை வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தரம் 5 வகுப்பு மாணவர்களின் பெற்றோர் பதறியடித்துக்கொண்டு கதறியபடியே பாடசாலை நோக்கி ஓடிவந்தனர்.
இதையடுத்து காயமடைந்த மாணவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.
மத்திய மாகாண முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்று மாணவர்களிடம் சுகம் விசாரித்தனர். சகல விதமான மருத்துவ பரிசோதனைகளையும் செய்யுமாறும் பணிப்பு விடுத்தனர். சிகிச்சையின் பின்னர் ஒரு சில மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
நீண்டகாலமாகவே குறித்த கூரை பழுதடைந்து காணப்பட்டது எனவும், அது குறித்து பாடசாலை நிர்வாகமோ, அரச அதிகாரிகளோ உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.