Sunday , May 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டிதான் சரியான தீர்வு! – அவரின் நினைவுப் பேருரையில் அமைச்சர் ராஜித எடுத்துரைப்பு

தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டிதான் சரியான தீர்வு! – அவரின் நினைவுப் பேருரையில் அமைச்சர் ராஜித எடுத்துரைப்பு

தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டி தீர்வே இந்த நாட்டுக்குப் பொருத்தமானது என்று அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தந்தை செல்வாவின் நினைவு தினத்தையொட்டி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் ‘தந்தை செல்வா நினைவுப் பேருரை’ நேற்று மாலை கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன ‘இலங்கையில் அதிகாரப் பகிர்வு’ என்ற தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தந்தை செல்வா சமஷ்டியைத் தீர்வாக முன்வைத்தார். அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வேறு தெரிவுகள் இல்லாமல் தமிழீழக் கோரிக்கையை அவர் தெரிவு செய்தார். இதற்கு இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளே காரணம். இன்னமும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்தான். மாறி மாறி மூன்றாம் தர – கீழ்த்தரமான அரசியல் செய்தனர். அவர்கள் மட்டுமல்ல, பாரம்பரியமான இடதுசாரிக் கட்சிகளும்கூட ஆரம்பத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் பேசினாலும், பின்னர் இனத்துவேச அரசியல் ஈடுபட்டனர்.

இதற்கு நான் பொறுப்பில்லை என்று சொல்ல முடியாது. நானும் பொறுப்பாளிதான். இவை நடக்கும்போது நான் மாணவன். நான் என்னுடைய அரசியலை விஜயகுமார ரணதுங்கவின் தலைமையில்தான் தொடங்கினேன். தமிழ் மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்தேன். இதற்காக மக்கள் விடுதலை முன்னணியினர் என் மீது தாக்குதல் நடத்தினர்.

இன்றும் எனது உடம்பில் இரண்டு குண்டுச் சிதறல்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அவை தமிழ் மக்களுக்காக நான் குரல் கொடுத்தமைக்காகக் கிடைத்தது. இதனை நான் கௌரவப் பரிசாகவே கருதுகின்றேன்.

தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தால் சிங்கள மக்களின் வாக்குகள் குறைந்து விடும் என்று சொல்கின்றார்கள். நான் களுத்துறை மாவட்டத்தில் 2004 ஆம் ஆண்டு போருக்கு எதிராகக் குரல் கொடுத்தேன். 70 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. தமிழ் மக்களின் உரிமைக்காக அதன் பின்னர் குரல் கொடுத்தேன். 2010ஆம் ஆண்டு ஒரு இலட்சமாக எனக்குரிய வாக்குகள் அதிகரித்தன. அதன் பின்னர் முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுத்தேன். ஒரு இலட்சத்து 40 ஆயிரமாக வாக்குகள் அதிகரித்தன. இதனைச் சிங்களத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் சமஷ்டியை வேண்டும் என்று கோருவதால், அது சிங்கள மக்கள் மத்தியில் தவறான பரப்புரையாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சமஷ்டி என்பது பிரிவினை என்று சிங்கள மக்கள் அஞ்சுகின்றார்கள். இது தொடர்பில் சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதனைச் செய்ய வேண்டும்.

அதிகாரங்கள் என்பது மையத்தில் இருக்கக்கூடாது. சமஷ்டி இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குத் தேவை. தீர்வைக் காணும் நடவடிக்கைகள் மந்த கதியில் இருக்கின்றமை உண்மைதான். இப்போது சரியான தீர்வைக் காண வேண்டும்.

இரண்டு தேசங்கள் இந்த நாட்டை ஒரு தாய் நாடாக ஏற்பதற்கு, இரண்டு தேசங்களுக்கும் அதிகாரங்கப் பகிரப்பட வேண்டும். அதிகாரங்கள் பகிரப்பட்டால்தான் இரண்டு தேசங்களும் சிநேகபூர்வமாக இந்த நாட்டில் வாழலாம் என்று தந்தை செல்வநாயகம் குறிப்பிட்டிருந்தார். அது சரியானது. தந்தை செல்வா கூறிய சமஷ்டி முறைமைதான் எமது நாட்டுக்குப் பொருத்தமானது” – என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …