Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாகச் செயற்படவேண்டும்! – சம்பந்தன் கோரிக்கை

ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாகச் செயற்படவேண்டும்! – சம்பந்தன் கோரிக்கை

“தேசிய இனப்பிரச்சினையும், பொருளாதாரப் பிரச்சினையும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளன. ஆகேவ, இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் உரியவகையில் தீர்வுகண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் தொடர்ந்தும் இணைந்து செயற்படவேண்டும்.”

– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை துணிச்சல்மிக்க அரசியல் தலைவரென பாராட்டிய அவர், தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“சிரேஷ்ட அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க நான்காவது தடவையாகவும் பிரதமராகப் பதவி வகிப்பதுடன், 40 வருடங்களாகத் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகின்றார்.

1977ஆம் ஆண்டில் நாம் இருவரும் தெரிவாகியிருந்தாலும் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக அங்கம் வகிப்பதற்குரிய வாய்ப்பு பிரதமர் ரணிலுக்குக் கிட்டியது. 1983ஆம் ஆண்டு நான் எம்.பி. பதவியை இழக்கநேரிட்டது. அப்போதைய அரசியல் நிலைமைகளின் பிரகாரம் எமது கட்சி உறுப்பினர்கள் எம்.பி. பதவிகளை தற்காலிகமாகத் துறந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, அமைச்சராக, பிரதமராக இருந்து நாட்டு மக்களுக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சேவையாற்றியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.

இவரை இலகுவில் குழப்பமடையச் செய்யமுடியாது. துணிச்சலான நபராவார். பரந்துபட்ட அறிவும் இருக்கின்றது. எதிராளிகளை துணிச்சலுடன் கையாள்வார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதித்துச் செயற்படும் இவருக்கு அனைத்துலக மட்டத்திலும் வரவேற்பிருக்கின்றது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நியமிக்கும் முடிவையும் எடுத்து நாட்டுக்காக விட்டுக்கொடுப்பை இவர் செய்திருந்தார். இப்படி இவரின் சிறப்பியல்புகளைக் கூறிக்கொண்டே போகலாம்.

அதேவேளை, தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு 30 வருடகால ஆயுதப்போராட்டமும் ஒருகாரணியாக இருந்தது. தேசிய இனப்பிரச்சினையும், தேசிய பொருளாதாரமும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டவை. ஆகவே, பயனுள்ள தீர்மானங்களை எடுக்கவேண்டும்.

இலங்கைக்கு உலகின் நல்லெண்ணமும் கிடைத்துள்ளது. அது அதிகரிக்கப்படவேண்டும். எனவே, உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்து குறிக்கோள்களை அடைவதற்காக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பிரதமரும், ஜனாதிபதியும் இணைந்து செயற்படவேண்ண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ் மக்களினதும் குறிப்பாக, வடக்கு, கிழக்குவாழ் தமிழ் மக்களின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …