தேசிய அரசிலிருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 18 உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் அறிவித்திருந்த நிலையில், இவர்களில் சிலர் கடந்த வாரம் கூட்டு எதிரணியுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
தேசிய அரசை இரண்டாக பிளவுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலவழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றார்.
மக்கள் மத்தியிலும், நாட்டில் தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரச மற்றும் தனியார் தரப்பினருடன் அரசுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடு மற்றும் நெருக்கடியை தமக்கு சாதகமாக்கிக்கொள்ள மஹிந்தவின் விசுவாசிகளாக தேசிய அரசிலுள்ள சு.கவின் உறுப்பினர்களை இந்தத் தருணத்தில் தம் பக்கம் இழுத்துக்கொண்டால் மக்கள் மத்தியில் அரசு மேலும் நெருக்கடியான சூழல் ஏற்படுமென எதிரணியினர் நினைக்கின்றனர்.
அதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கும்படி கூறிவருகின்றனர். நாடாளுமன்றில் 95 ஆசனங்களை மாத்திரமே சு.க. வைத்துள்ளது. மஹிந்தவை பிரதமராக்க முடியாது என்று தெரிந்தும் மைத்திரியின் தரப்புக்கும், தேசிய அரசுக்கும் கடுமையான நெருக்கடியைக் கொடுக்கும் நோக்கில் தேசிய அரசிலுள்ள மஹிந்தவின் விசுவாசிகள் தொடர்ந்து அழுத்தம்கொடுத்து வருகின்றனர்.
அதற்கு சு.கவின் மத்திய குழுவும் மைத்திரியும் வழிசமைக்காத நிலையிலேயே மேற்படி 18 பேரும் வெளியேற தீர்மானித்துள்ளனர். கடந்த வார இறுதியில் இவர்களுக்கும் மஹிந்த அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவிருந்த அவரின் சகோதரர் பஸில் ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று பத்தரமுல்லையில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் இவர்கள் வெளியேறும் தருணம் அதற்காக அரசுக்குக் கொடுக்கவுள்ள அழுத்தங்கள் குறித்து ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் அதாவது, எதிரணி ஓகஸ்ட் 8ஆம் திகதி பிரகடனப்படுத்தவுள்ள அரசு எதிர்ப்புப் பிரகடனத்தில் ஒருசிலர் தேசிய அரசிலிருந்து வெளியேறி எதிரணியில் மோடையில் ஏற தீர்மானித்துள்ளனர்.
இவர்களின் வெளியேற்றத்தின் பின்னர் அரசின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாதுபோகக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். அப்போதும் தற்போதைய அரசு எத்தணிக்கும் அரசமைப்பு உள்ளிட்ட முக்கிய எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாதுபோகும். அதனடிப்படையில் அரசுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்து 2020ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த தரப்பு தமது அரசியல் பலத்தை நிரூபிக்கவே காய்கள் நகர்த்தப்படுகின்றன என்றும் அறியமுடிகின்றது.