இலங்கை அரசியலில் புதிய அத்தியாயம் மைத்திரி ரணில் அரசு வழிவகுக்குமா? சு.நிஷாந்தன்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்று மக்களால் தோட்கடிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும் தெரிவுசெய்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பேரினவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை தோட்கடித்து மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சியை மலரச்செய்வதற்கு தற்போதைய அரசு கடுமையான பிராயச்சித்தங்களை மேற்கொண்டு வருகின்றமை கண்கூடு.
முன்னாள் மஹிந்த அரசின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் விடுதலையடைந்துள்ளதாகவே பெரும்பான்மையான மக்கள் 2015ஆண்டு தேர்தல் வெற்றியை எண்ணினர். உயர் கண்காணிப்பு, தலையீடு, ஊடக அடக்குமுறை, ஜனநாயக நிறுவகங்களை தளர்வடையச் செய்தல் போன்ற பல்வேறு அடக்குமுறைகளை மஹிந்த அரசு மேற்கொண்டிருந்தது.
மஹிந்த அரசின் ஊழல் மற்றும் பாரபட்சங்கள் போன்றன அதன் அபிவிருத்தி முயற்சிகளில் மேலோங்கியிருந்தது. மஹிந்த தன்னால் ஈட்டப்பட்ட போர் வெற்றியை இதற்காகப் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் போர் வெற்றியைப் பயன்படுத்தி பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவையும் பெற்றிருந்தார்.
இந்நிலையிலேயே நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய புதியதொரு அரசியல் தலைமைத்துவத்திற்கான தேவை எழுந்தது. இதன்மூலமே தற்போது ஆட்சியிலுள்ள தேசிய அரசானது நாட்டின் ஆட்சியைப் பெற்றுக்கொண்டது. அதாவது ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துதல், நல்லாட்சியை மேலோங்கச் செய்தல் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியவாறு தேசிய அரசு ஆட்சிக்கு வந்தது.
கிராம மட்ட சிங்கள மக்கள் தேசிய அரசுக்கு ஆதரவு வழங்கினர். அதேவேளையில் வடக்கில் வாழும் தமிழ், முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரும் சில அனைத்துலக நாடுகளும் தேசிய அரசுக்கே தமது முழு ஆதரவையும் வழங்கினர்.
இவர்களின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றியீட்டியிருந்தார்.
இசுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து இந்த நாட்டின் முதலாவது தேசிய அரசை அமைத்து பாரியதொரு மறுமலர்ச்சியை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியிருந்தனர்.
தற்போது தேசிய அசானது தனது இரண்டாம் ஆண்டு ஆட்சியின் போது பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த நாட்டு பொருளாதாரமானது நலிவுற்றுள்ளதுடன் அரசுக்குள் இடம்பெறும் கூர்மையான அரசியற் பேதங்கள் வெளிப்படையாகக் காண்பிக்கப்படுகின்றன. நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இரு தலைவர்களிடமிருந்தும் வெளிப்படுத்தப்படும் முரணான கருத்துக்கள் அவர்களது ஒற்றுமையின்மையைச் சுட்டிநிற்கிறது.
முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவினதும் அவரது குடும்ப உறுப்பினர்களினதும் ஊழல் மற்றும் கொலை வழக்குகள் தொடர்பில் மைத்திரி ரணில் அரசானது இரகசியமான பின்கதவுச் சமரசப் பேச்சுக்களில் ஈடுபடுவதும் தற்போது அதிகரித்துள்ளது.
விரோதத்தைத் தூண்டும் பேச்சுக்களில் ஈடுபடும் பௌத்த பிக்குகள் தொடர்பில் தேசிய அரசானது அமைதி காப்பதானது இந்த அரசின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு ஏமாற்றமளித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பில் பணியாற்றும் தமிழ் அரச அதிகாரி ஒருவரை பௌத்த பிக்கு ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை அச்சுறுத்தலையும் விடுத்த போதும் இவருக்கு எதிராக அரசு எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.
அனைத்துலக பங்குதாரர்களுக்கு குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற இலங்கையுடன் மிக நெருக்கமான உறவைப் பேணும் நாடுகளைப் பொறுத்தளவில் இந்த ஆட்சி மாற்றமானது முற்றிலும் பொருளாதார அல்லது பாதுகாப்பு சார் கூட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்கியுள்ளன.
இலங்கையின் முன்னைய ஆட்சியில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்திருத்திருந்ததால் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இலங்கைக்கு இடையிலான உறவுநிலையானது பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இவ்விரு நாடுகளினதும் உள்நாட்டு மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் மீதான நலன்கள் பாதிப்படைந்திருந்தன.
தற்போதைய அரசானது அரசியல் ஸ்திரமற்றதாகவும் பாதுகாப்பற்ற நிலையிலும் காணப்படுகின்ற போதிலும், இந்த அரசானது தன்னால் வழங்கப்பட்ட அரசியல் சீர்திருத்தம் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய கணிசமானளவு வாய்ப்பைக் கொண்டுள்ளது. அரசியற் தீர்வுக்கான காலநிலை ஒருபோதும் உகந்ததாகக் காணப்படவில்லை.
இலங்கையில் இரண்டு பிரதான கட்சிகள் முரண்பாடான நிலையைக் கடைப்பிடித்தமை மட்டுமல்லாது, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சியானது இலங்கையின் முன்னைய அரசுகளில் அங்கம் பெறாது அவற்றைப் புறக்கணித்து வந்துள்ளமையுமே இலங்கையில் அரசியற் தீர்வுக்கான வாய்ப்யு உருவாகியிருக்கவில்லை.
ஆனால் தற்போது எதிர்க்கட்சியாகத் திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. அத்துடன், தற்போதைய தேசிய அரசின் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கும் இது ஆதரவளித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய தேவையை உணர்ந்து செயற்படுகிறது.
அனைத்துலக சமூகத்தாலும் மனித உரிமைகள் அமைப்புக்களால் இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டும் என தீவிரமாக அழுத்தம் வழங்கப்பட்ட போதிலும் சிறிலங்காவில் தேசிய அரசு பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அழுத்தம் கணிசமானளவில் குறைவடைந்துள்ளது.
பொறுப்புக்கூறல் தொடர்பான அரசியற் சீர்திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளித்துள்ளது. இது தொடர்பில் கேள்வியெழுப்புவதால் பாரியதொரு அரசியல் ஆபத்து ஏற்படும் என்பதை கூட்டமைப்பு அடையாளங் கண்டுகொண்டமையே இதற்கான காரணமாகும்.
இதுவே இலங்கையில் அரசியற் தீர்வொன்றை எட்டமுடியாமற் போனமைக்கு வழிவகுத்தது. எதுஎவ்வாறெனினும், தேசிய அரசானது ஆட்சிக்கு வரும்போது ஆட்சியில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. இவ்வாறான குறைபாடுகளுடன் ஆட்சியை நடாத்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.
இலங்கையில் 225 நாடாளுமன்ற ஆசனங்களில் தேசிய அரசானது 155 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர். இவர்களில் சிலர் மஹிந்த தரப்பிற்கு மாறவுள்ளதாக அச்சுறுத்தி வருகின்றனர்.
ஏனைய சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவாக உள்ளனர். ஆகவே, அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஜனாதிபதி தனது சக்தி முழுவதையும் ஒன்றுதிரட்டி தனது கட்சியை ஒன்றாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
குறிப்பாக மஹிந்தவுக்கு ஆதரவான தரப்பினர் புதிய அரசியற் கட்சியை நோக்கி நகரும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்சி உறுப்பினர்களை தனது தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைக்க வேண்டிய நிலையிலுள்ளார். 2017இல் ஆட்சியைக் கவிழ்க்கவுள்ளதாக மஹிந்த அச்சுறுத்தல் விடுத்திருந்தார். ஆனால், இவரது கருத்துக்களை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முற்றிலும் நிராகரித்துள்ளனர்.
கால முதிர்விற்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைப்பதற்கு அரசியல் யாப்பு இடமளிக்கவில்லை எனவும் அத்துடன், மஹீந்த தலைமையில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான சாதகமான அரசியற் சூழ்நிலையும் தற்போது காணப்படவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், இந்த அரசு தோல்வியடைகின்ற போதெல்லாம், மஹிந்த தன்னை அரசியலில் நிலைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்கிறார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளில் முழுமையான கவனத்தைச் செலுத்தும் இதேவேளையில், தற்போதைய அரசின் பிரதான ஆளுங்கட்சியாகத் திகழும் ஐக்கிய தேசியக் கட்சியானது தனது பின்னிருக்கை உறுப்பினர்களின் அழுத்தத்திற்கு முகங்கொடுக்கின்றது.
ஸ்திரமானதொரு அரசு அரசியற் தீர்விற்கு ஆதரவளிக்காதவிடத்து அதனைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை அரசியற் தலைவர் ஒருவர் தான் பெற்றுக் கொண்ட அனுபவங்களைக் கொண்டு அறியமுடியும். அரசியற் தீர்வு பெறாதவிடத்து பாரிய மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட பொருளாதாரத் திட்டங்களும் முறிவடைந்து விடும் என்பதை பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் நன்கறிந்துள்ளனர்.
அரசியல் யாப்பு வரைவு தொடர்பாக ஆறு பேரைக் கொண்ட உபகுழுவின் அறிக்கையானது நாடாளுமன்றின் விவாதத்திற்காகக் காத்திருக்கும் போது, அரசின் முன்னுரிமைகள் வேறு விடயங்களை நோக்கியதாக உள்ளமை தெளிவாகிறது. 2016இன் இறுதிப் பகுதியில் அரசியல் யாப்பு சீர்திருத்த நடவடிக்கை பின்தள்ளப்பட்டு, அரசானது உடனடி அரசியல் நிர்ப்பந்தங்களை நோக்கிச் செயலாற்றுவதை முன்னுரிமைப்படுத்தியுள்ளது.
புதிய அரசியல் யாப்பு தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் விவாதங்கள் இடம்பெறவில்லை. அரசானது அரசியற் சீர்திருத்தங்கள் தொடர்பாக தனது பெரும்பான்மை சிங்கள மக்களுடன் கலந்துரையாடாவிட்டால், புதிய அரசியல் சீர்திருத்தமானது ஏனைய அரசியல் அழுத்தங்களை எதிர்ப்பதில் சவால்களை எதிர்நோக்கலாம். இவ்வாறானதொரு சூழ்நிலையில் கருத்துக்கணிப்பானது ஆபத்தானதாக அமையலாம். செய்ய வேண்டிய பணிகள் அதிகம் காணப்படுகின்ற நிலையில் இதற்கான காலஅவகாசம் குறைவாக உள்ளது.
சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஆகியோர் தெரிவொன்றைக் கொண்டுள்ளனர்.
அதாவது இவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட முடியும். இவ்வாறானதொரு புதிய அத்தியாயத்தின் மூலம் இலங்கையில் அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். அல்லது இவ்வாறானதொரு அரிய வாய்ப்பை விரயமாக்கிய தலைவர்களாகவே இவர்களை இந்த நாடு நோக்கும்.
இலங்கையின் கொடிய யுத்தம் முடிவிற்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தற்போதும் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதில் பல்வேறு இடர்களை எதிர்கொள்கின்றனர்.
இவர்களது காத்திருப்பானது நீண்டதாகவும் வலி நிறைந்ததாகவும் காணப்படுகிறது. நாட்டின் இரு தலைவர்களும் இது தொடர்பில் தீர்மானம் எட்டவேண்டும். இந்த வாய்ப்பை நாட்டின் இரு தலைவர்களும் கைவிட்டால் ஒருபோதும் அரசியற் தீர்வை எட்டமுடியாது.