Friday , March 29 2024
Home / சிறப்பு கட்டுரைகள் / வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?

வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?

வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?

பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா?

என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி’ இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 32 ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் வட்டக்கண்டலில் 76 பொதுமக்கள் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

வடமாகாண சபையானது இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய பின் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குத் தேவையான சான்றுகளை திரட்டும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டது என்று என்னுடைய முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது விக்னேஸ்வரன் வடமாகாண சபையே போர்க் குற்ற விசாரணைகள் நடாத்தினால் என்ன? என்று கேட்கிறார். வடமாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் ஒரே ஒரு வருடம் தான் இருக்கும் ஒரு பின்னணியில் இது ஒர் அரசியல் சாகசக் கூற்றா?அல்லது நடைமுறைச் சாத்தியமான ஒரு யோசனையா?

இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறையைச் சேர்ந்த புலமைச் செயற்பாட்டாளரும், சிவில் சமூகச்செயற்பாட்டாளருமாகிய குமாரவடிவேல் குருபரனுடன் கதைத்த பொழுது அவர் பின்வருமாறு கூறினார். ‘மாகாண சபையின் அதிகார வரம்புக்குள் அவ்வாறு செய்வதில் சட்டத் தடைகள் ஏற்படலாம். ஆனால் மக்கள் ஆணையைப் பெற்ற முதலமைச்சர் என்ற அடிப்படையிலும் ஒரு முன்னாள் நீதியரசர் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையிலும் விக்னேஸ்வரன் மாகாண சபைக்கு வெளியே ஒரு கட்டமைப்பை உருவாக்கலாம். கிட்டத்தட்ட மக்கள் தீர்ப்பாயத்தைப் போல. அதற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் நிபுணத்துவ உதவிகளையும் பெறலாம் என்று|| அதாவது ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு மாகாண சபைக்கு வெளியே வந்து தமிழ் மக்கள் பேரவைக்கு அவர் தலைமை தாங்குவது போல என்று இதை எடுத்துக் கொள்ளலாம்.

இதை இன்னும் சுட்டிப்பான வார்த்தைகளில் சொன்னால் சட்ட ரீதியாக அதைச் செய்ய முடியாது. சட்ட மறுப்பாகவே அவர் அதைச் செய்ய வேண்டி இருக்கும். அல்லது குருபரன் கூறுவது போல அவர் ‘சட்டத்தைக் கட்டுடைக்க’ வேண்டி இருக்கும். ஆனால் கடந்த ஏழாண்டுகளாக தமிழ் மிதவாதிகளில் எவருமே அரசாங்கத்துக்கு நோகத்தக்க விதத்தில் சட்ட மறுப்பு போராட்டம் எதையும் நடத்தியிருக்கவில்லை. இதை இன்னும் கூராகச் சொன்னால் அவ்வாறான ஒரு போராட்டத்ததை நடத்தியதற்காக எந்த ஒரு தமிழ் மிதவாதியும் கடந்த ஏழாண்டுகளில் கைது செய்யப்படவில்லை. அல்லது கைது செய்யப்படும் அளவுக்கு யாருமே றிஸ்க் எடுக்கவில்லை என்றும் சொல்லலாம்.

விக்னேஸ்வரன் அப்படி ஒரு றிஸ்கை எடுப்பாராக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் அவருக்கு சிலை வைத்துக் கொண்டாடுவார்கள். அவர் அப்படி ஒரு றிஸ்கை எடுப்பாரா? அவர் அப்படி ஒரு றிஸ்கை எடுப்பாராக இருந்தால் தாயகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் சட்டத்துறை வல்லுநர்கள் பலரும் அவரைப் பின்பற்றி றிஸ்க் எடுப்பார்கள். தமிழ் சட்டவாளர்களும் சட்ட வல்லுநர்களும் முன்னெப்பொழுதையும் விட அதிக றிஸ்க் எடுக்க வேண்டிய காலகட்டம் இது. ஒரு இனப்படுகொலையை நிரூப்பதற்குத் தேவையான அறிவு பூர்வமான விஞ்ஞான பூர்வமான தரவுகளைத் திரட்டி அவற்றை சட்ட பூர்வமாக தொகுக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது.

கடந்த ஆண்டு முழுவதிலும் நிகழ்ந்த நிலைமாறு கால நீதி தொடர்பான பொதுமக்களின் சந்திப்புக்களின் பொழுது ஒரு விடயம் அவதானிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களில் பொரும்பாலானவற்றுக்குச் சட்ட ஆலோசகர் எவரும் இருக்கவில்லை. அந்த அமைப்புக்கள் பொரும்பாலும் பாதிப்புற்ற மக்களின் அமைப்புக்களாகவே காணப்பட்டன (people oriented). இது தொடர்பில் கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரைக்கு முகநூலில் ஒரு நண்பர் அருமையான கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார். அதாவது மேற்படி அமைப்புக்கள் ‘கருத்து மைய செயற்பாட்டாளர்களை”மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புக்களாக இருக்க வேண்டும் என்று. (concept oriented).

அவ்வாறு இல்லாத காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அமைப்புக்களில் பெரும்பாலானவை ஒரு சட்ட உதவியாளரையேனும் கொண்டிருக்கவில்லை. கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் மட்டக்களப்பில் நிகழ்ந்த ஓர் அமர்வின் போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனோர்களுக்கான அமைப்பின் பிரதிநிதிகளை ஒரு சட்டவாளர் சந்தித்தார். இச் சந்திப்புக்கு அடுத்த நாள் அம்பாறையில் நடந்த மற்றொரு சந்திப்பின் போது மேற்படி பாதிப்புற்ற அமைப்புக்களைச் சேர்ந்த பெண்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது.

‘உங்களுடைய பல்லாண்டு கால அலைந்த சீவியத்தில் காணாமல் போனவர்களின் ஆவணங்களையும் காவிக் கொண்டு இது வரையிலும் எத்தனை பேரைச் சந்தித்திருக்கிறீர்கள்?’ என்று. அதற்கு அவர்கள் சொன்னார்கள் ‘எங்களுக்கு கணக்குத் தெரியாது. நிறையப் பேரைச் சந்தித்திருக்கிறோம்’ என்று. ‘இவ்வாறான சந்திப்புக்களில் உங்களுக்கு பிரயோசனமாக இருந்த சந்திப்புக்களைப் பற்றிச் சொல்லுங்கள் ‘; என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்னார்கள் ‘நேற்று மட்டக்களப்பில் அந்த பெண் சட்டவாளருடனான சந்திப்புத்தான் இருவரையிலும் நாங்கள் மேற்கொண்ட சந்திப்புக்களிலேயே நம்பிக்கையூட்டும் ஒன்றாக அமைந்திருந்தது’ என்று. அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் சட்ட ரீதியாக எவ்வாறு நீதியையும் இழப்பீட்டையும் பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பில் சட்ட விழிப்பூட்டிய ஓர் அமர்வையே தங்களுக்கு நம்பிக்கையூட்டும் ஓரு சந்திப்பு என்று அந்தப் பெண்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

இவ்வாறு ஒரு சட்டவாளரின் உதவி தேவை என்பதனை தமிழ் பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புக்கள் உணரத் தொடங்கி விட்டன. காணாமல் போனவர்களுக்கான சில அமைப்புக்கள் அண்மை மாதங்களில் இவ்வாறு சட்டவாளர்களை நாடி வரத் தொடங்கி விட்டன. வடமாகாண சபை இது விடயத்தில் அந்த அமைப்புக்களுக்கு ஏதும் உதவிகளைச் செய்யலாம்;.தமிழ் மக்கள் பேரவையும் செய்யலாம். தமிழ் சட்டவாளர்கள் சங்கம் அதைச் செய்யலாம்.குறிப்பாக அதிகளவு சட்டவாளர்களை தன்னுள் கொண்டிருக்கும் கூட்டமைப்பு அதைச் செய்யலாம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதைச் செய்யலாம்.

குமரபுரம் படுகொலை வழக்கு விசாரணைகள் தொடக்கத்தில் திருகோணமலையிலேயே இடம்பெற்றன. பின்னர் அவை அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டன. விராரணைகளை மறுபடியும் திருமலைக்கு மாற்றுவதற்கு உதவுமாறு சம்பந்தப்பட்ட மக்கள் கூட்டமைப்பின் உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒரு சட்டவாளரை இரு தடவைகள் சந்தித்து பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர் உதவ முன்வரவில்லை என்று கூறுகிறார்கள்.

அது மட்டுமல்ல போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக புள்ளி விவரங்களையும் ஆவணங்களையும் திரட்டும் நோக்கத்தோடு கூட்டமைப்பானது சில ஆண்டுகளுக்கு முன் பம்பலப்பிட்டியில் ஓர் அலுவலகத்தைத் திறந்திருக்கிறது. லண்டனில் இருந்து கிடைத்த நிதி உதவியுடன் அந்த அலுவலகம் இயங்கியிருக்கிறது. ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எதுவும் நடக்கவில்லை. வட கிழக்கில் இருந்து கொழும்புக்குச் செல்பவர்கள் தங்கிச் செல்லும் ஒரு லொட்ச் ஆகத் தான் அந்த அலுவலகம் இயங்கியது என்று ஒரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இத்தகையதோர் பின்னணியில் கடந்த ஏழாண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வழக்குகளை முன்னெடுத்து வரும் அமைப்புக்கள் ஈழத்தமிழர் மத்தியில் மிகச் சிலவே உண்டு. மனித உரிமைகளுக்கான இல்லம் (HHR) மற்றும், மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான மையம் (CHRD) போன்ற சில அமைப்புக்களே ஈழத்தமிழர் மத்தியில் செயற்பட்டு வருகின்றன.

மனித உரிமைகள் இல்லம் 1977 இல் தொடங்கப்பட்டது.இலங்கைத்தீவின் மூத்த மனித உரிமைகள் அமைப்புக்களில் அதுவும் ஒன்று. அதன் ஸ்தாபகரான சேவியர் கடந்த ஆண்டு கனடாவில் உயிர் நீத்தார். ஈழத்தமிழர் மத்தியில் தோன்றிய ஒரு முன்னோடி மனித உரிமைச் செயற்பாட்டாளராகிய சேவியரின் மறைவானது அதற்குரிய முக்கியத்துவத்தோடு நினைவு கூரப்படவில்லை. சிலஊடகங்களில் அதிகம் கவனத்தை ஈர்க்காத ஒரு செய்தியாக அது பிரசுரமாகியது. லண்டனை தளமாகக் கொண்டியங்கும் பொங்குதமிழ்இணையத்தளத்தில் ஓர் இரங்கல் கட்டுரை வெளிவந்திருந்தது.

இனப்பிரச்சினை தொடர்பில் ஏறக்குறைய நான்கு தசாப்த கால தொகுக்கப்பட்ட ஆவணங்கள் எச்.எச்.ஆரிடம் உண்டு. இனப்படுகொலை எனப்படுவது நாலாம் கட்ட ஈழப்போரின் முடிவில்தான் இடம்பெற்ற ஒன்று அல்ல. அதற்கு முன்னைய கட்டஈழப்போர்களின் போதும் அப்பாவித் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட பல படுகொலைச் சம்பவங்கள் உண்டு.அது மிக நீண்ட ஒரு கொடுமையான பட்டியல். இவ்வாறு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பான கணிசமான ஆவணங்கள் மனித உரிமைகள் இல்லத்திடம் உண்டு என்று நம்பப்படுகின்றது.

துரதிஸ்ட வசமாக கடந்த செப்ரம்பர் மாதத்தில் இருந்து இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒரு வித தேக்கத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நிறுவனமும் செயற்படாத ஒரு பின்னணியில் வழக்கறிஞர் ரட்ணவேலின் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான அமைப்பு (CHRD) ஒன்று தான் தற்பொழுது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான வழக்குகளை முன்னெடுத்து வருகிறது. நிதிப்பற்றாக்குறை காரணமாக அதன் பணிகளைப் பரவலாக்க முடியாதிருப்பதாகக் கூறப்படுகிறது. சி.எச்.ஆர்.டி. பெருமளவிற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தோடு தொடர்புடைய வழக்குகளையும் சில காணி சம்பந்தமான வழக்குகளையும் கையாண்டு வருவதாகவும் ஏனைய வழக்குகளைக் கையாள்வதற்கு உரிய நிறுவனங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு சி.எச்.ஆர்.டி மட்டும் கையாள முடியாத அளவுக்கு எங்களிடம் வழக்குகள் உண்டு என்று குமரபுரம் படுகொலை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து செயற்படும்ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார்.

எச்.எச்.ஆரும் சி.எச்.ஆர்.டியும் தமது வழக்குகளுக்காக சட்டவாளர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றன. எனினும் வருமானத்தை எதிர்பாராது அதை ஒரு தொண்டாக முன்னெடுக்கும் சட்டவாளர்களும் உண்டு.எச்.எச்.ஆருடன் சேர்ந்து செயற்பட்ட கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டுக்குக் குறையாத சட்ட செயற்பாட்டாளர்களில் சிலர் இப்பொழுது சில வேறு நிறுவனங்களோடு சேர்ந்து செயற்படுகிறார்கள். இவர்களைப் போன்ற அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு சட்டச் செயற்பாட்டு அமைப்பாக இயங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்கள் முன்வர வேண்டும். முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரன் இது தொடர்பில் கவனம் செலுத்துவாரா?

எச்.எச்.ஆர்.பெருமளவுக்குச் செயற்படாத ஒரு பின்னணியில் அது கிராமங்கள் தோறும் பின்னி வைத்திருந்த ஒரு வலைப்பின்னல் அறுபடக் கூடிய ஓர் ஆபத்து உண்டு. அந்த அமைப்பில் செயற்பட்ட சிலர் இப்பொழுது வேறு அரச சார்பற்ற நிறுவனங்களை நோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள். அதோடு சுமார் 40 ஆண்டு காலமாக தொகுக்கப்பட்ட சான்றாதாரங்களை அந்த நிறுவனம் வைத்திருக்கிறது. இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு அந்த ஆவணங்கள் இன்றியமையாதவை.

தமிழ் மிதவாத அரசியலைக் குறித்து எழுதும் பொழுது அதை அப்புக்காத்து அரசியல் என்றும் கறுப்புக் கோட்டு அரசியல் என்றும் எள்ளலாக எழுதுவது உண்டு. ஆனால் அதிகம் விமர்சிக்கப்படும் இந்த அப்புக்காத்துப் பாரம்பரியத்துக்குள் ஒரு புனிதமான மெல்லிய இழையாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சியைக் காண முடியும். தொடர்ச்சி அறாத ஒரு மெல்லிழையாகக் காணப்படும் இச்செயற்பாட்டுப் பாரம்பரியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பணத்துக்கோ பிரபல்யத்துகோ ஆசைப்பட்டது இல்லை. இதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் பெயர்கள் வெகுசனப்பரப்பில் அதிகம் பிரசித்தமாகவும் இல்லை. ஆனால் சட்டத்துறைக்கூடாக தாம் பெற்ற பணத்தையும் புகழையும் அரசியலில் முதலீடு செய்யும் சட்டவாளர்களின் பெயர்களே தமிழ் மக்கள் மத்தியில் பிரசித்தமாகி உள்ளன.

அதிகம் பிரசித்தம் அடையாத சட்டச் செயற்பாட்டாளர்களே தமிழ் மக்களுக்குரிய நீதியைப் பெற்றுத் தரவல்ல ஆவணங்களைத் தொகுப்பதற்கு அதிக பங்களிப்பை வழங்கி யிருக்கிறார்கள. இவ்வாறான சட்ட செயற்பாட்டளர்களை ஒன்று திரட்டும் வேலையை விக்னேஸ்வரன் செய்வாரா? பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அதிக பட்சம் அறிவுபூர்வமான விஞ்ஞான பூர்வமான தரவுகளை திரட்டும் வேலையை அவர் நிறுவனமயப்படுத்துவாரா? இது தொடர்பில் எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்த மனித உரிமைகளுக்கான தகவல்களை ஆய்வு செய்யும் அமைப்பு (HRDAG) போன்ற அமைப்புக்களின் உதவிகளை அவர் பெறுவாரா? அரசியல் கைதிகள், தடுப்பிலிருப்பவர்கள் மற்றும் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவிகளை வழங்க வல்ல அமைப்புக்களை அவர் உருவாக்குவாரா? குறைந்த பட்சம் உடனடிக்கு தமிழ் மக்கள் பேரவையை இது தொடர்பில் நெறிப்படுத்துவாரா?

முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு,வட்டுவாகல் பாலத்தைக் கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு தீர்மானங்களும் துணிச்சசலான உரைகளும் மட்டும் தீர்வாக அமையாது.

ஒரு நீதியரசராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் அவர்.தமிழ் மக்களுக்குச் சட்டச்செயற்பாட்டாளர்கள் அதிகமாகத் தேவைப்படும் ஒரு காலகட்டத்தில் தனக்குள்ள மூப்பு, தகமை, அங்கீகாரம், மக்கள் ஆணை என்பவற்றின் அடிப்படையில் சட்டச்செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து நிறுவனமயப்படுத்தும் றிஸ்க்கை அவர் ஏற்பாரா? ஒரு முன்னாள் நீதியரசர் என்ற அடிப்படையில் அவருக்கே உரிய ஒரு செயற்பாட்டுப் பரப்பு அது.பெரும்பாலும் அது ஒரு சட்ட மறுப்பாகவே அமைய முடியும். அது விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தை நிறுவுவதற்கான ஒரு சோதனையாகவும் அமையும்.அதே சமயம் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமாறு கால நீதியின் பிரயோக விரிவைச் சோதிக்கும் ஒரு பரிசோதனையாகவும் அமையும்.

நிலாந்தன்

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites