“இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டியது மிவும் அவசியமாகும். ஆனால், இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டி இந்த ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு கடும் போக்காளர்கள் சதி செய்கின்றார்கள். எனவே, இந்த விடயம் தொடர்பில் நன்கு சிந்தித்துச் செயற்பட வேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பாகும்.”
– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
“இந்த நாட்டில் வாழுகின்ற மூவின மக்களும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவே என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு சகாப்த விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் மூவின மக்களும் சமாதானமாக – ஒற்றுமையாக வாழ்வதை விரும்பாத சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள். திடீரென புத்தர் சிலை அல்லது பௌத்த விகாரை, இந்து ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்களை அடிப்படையாக வைத்துப் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.
பௌத்த, இந்து, இல்லாமிய மற்றும் கிறிஸ்தவ மத போதனைகளில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. ஒவ்வொரு பிரச்சினைகள் ஏற்படும்போதும் சம்பந்தப்பட்ட எல்லோரும் முன்னே வருவதால் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
இந்த சிறிய நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும். இந்த சகோதரத்துவத்தை உருவாக்குவதற்கு அரசியல்வாதிகளால் மாத்திரம் முடியாது. அனைத்துத் தரப்பினருடன் பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும். பௌத்த, இந்து, இல்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
சர்வதேச வெசாக் தின விழாவில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளார். வெசாக் தின இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்ள நேபால் நாட்டின் ஜனாதிபதியும் இலங்கை வருகை தரவுள்ளார். ஆனால், இந்தியப் பிரதமர் பல ஒப்பந்தங்கள் செய்வதற்கு வருகை தரவுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவர் வேறு எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளப்போவதில்லை.
நாட்டிலுள்ள மாகாணங்களில் கிழக்கு மாகாணம் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்வியில் பின்நோக்கிக் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்ற போதிலும் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மாகாணம் கல்வியில் முன்னேற்றமடைந்துள்ளது.
மத்திய, மாகாண கல்வி அமைச்சுகள் இணைந்து கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்குப் புதிய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். நாட்டை நாங்கள் முன்னேற்றுவோம். ஆனால், பிள்ளைகள் முன்னேற்றமடைய வேண்டும். சமூகம் முன்னேற வேண்டுமானால் மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளின் முன்னேற்றமடைய வேண்டும்” – என்றார்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் அழைப்பின் பேரில் கல்வி அமைச்சர் அகிலவிராஜா காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா, சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்படப் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.