Sunday , December 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம்!

உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம்!

வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததையடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் இரவு சேர்க்கப்பட்டுள்ளபோதிலும் அங்கிருந்தவாறு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

அவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்களைப் பலாத்காரமாக மீண்டும் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்த்துள்ளோம் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக சிறைச்சாலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுள் மதியழகன் சுலக்ஷன் தானாக முன்வந்து மீண்டும் சிறை திரும்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். ஏனைய இருவரும் சில நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுத் திரும்பி போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மூன்று அரசியல் கைதிகளதும் போராட்டம் இன்று 22ஆவது நாளைத் தாண்டியுள்ளது.

கைதிகளாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் முன்னெடுக்கும் 11ஆவது தடவையான உண்ணாவிரதப் போராட்டம் இதுவாகும்.

ஜனாதிபதியின் யாழ்ப்பாணப் பயணத்தின்போது தமது கோரிக்கை தொடர்பில் ஒரு நியாயமான முடிவு கிடைக்குமென்ற நம்பிக்கை அவர்களிடமிருந்ததாக குடும்பத்தவர்கள் தெரிவித்தனர். எனினும், இந்த விடயம் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று தனது வழமையான பாணியில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என கைதிகளின் குடும்பத்தவர்கள் கவலை வெளியிட்டனர்.

நேற்றுமுன்தினம் மதியத்தின் பின்னர் கைதிகளின் உடல்நிலைமை மிகவும் மோசமடையத் தொடங்கியதையடுத்தே சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனக் குடும்பத்தவர்கள் மேலும் கூறினர்.

இந்நிலையில், “அரசியல் கைதிகள் அனைவரும் விரைந்து விடுவிக்கப்படவேண்டும். இனிமேலும் அவர்களின் விடயத்தை இழுத்தடிக்கமுடியாது. இப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும். இந்த விடயம் குறித்து திட்டவட்டமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசுவேன். ஜனாதிபதியின் அழைப்புக்காகக் காத்திருக்கின்றேன்” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.

“கைதிகள் விடயம் ஒரு தொடர்கதையாக நீடிக்கின்றமை நல்லிணக்கம் ஏற்படுவதற்கான புறச்சூழலைப் பெரிதும் பாதித்து நிற்கின்றது. இந்த விடயத்தில் தீர்க்கமான அரசியல் தீர்மானங்கள் அவசியப்படுகின்றன. அதை அரசியல் தலைமைகள் எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது எனக் கருதுகிறேன்” என்று இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் ஜனாதிபதியிடம் கடந்த வார ஆரம்பத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், அதற்கான நேரம் ஜனாதிபதியால் ஒதுக்கப்படாததையடுத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கடும் சீற்றத்துடன் அவசர கடிதம் எழுதியிருந்தார். அதற்கு ஜனாதிபதி பதில் கடிதம் அனுப்பவில்லை.

அதனையடுத்து யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஜனாதிபதியின் நிகழ்வை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் எம்.பிக்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

loading…


Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv