யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞரொருவர் உயிரிழந்ததையடுத்து, அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றது.
யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டத்தில் உதயபுரம், கடற்கரை வீதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களை இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்றோர் வழிமறித்துச் சுட்டதில் இளைஞரொருவர் படுகாயமடைந்திருந்தார்.
குறித்த இளைஞர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி
நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.
டொன் பொஸ்கோ ரிஷ்மன் (வயது 24) என்பவரே உயிரிழந்தவராவார்.
இந்தச் சம்பவத்தையடுத்து யாழ்.குடாநாட்டில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டவர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வாக்கு மூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த இளைஞரை பொலிஸ் அதிகாரி ஒருவரே சுட்டுக்கொன்றார் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.