Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவைப்பெற அரசு பகீரதப் பிரயத்தனம்! – முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்களுடன் ஆளுநர் அவசர சந்திப்பு

20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவைப்பெற அரசு பகீரதப் பிரயத்தனம்! – முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்களுடன் ஆளுநர் அவசர சந்திப்பு

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைபுக்கு வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் அனுமதியைப் பெறும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இதன் ஓர் அங்கமாக கிழக்கு மாகாண முதலமைச்சர், தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.
இதற்காக தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இராப்போசன விருந்தை ஏற்பாடுசெய்த ஆளுநர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கியத்துவம், அது ஏன் நிறைவேற்றப்படவேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.
அத்துடன், குறித்த சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் மீது ஓகஸ்ட் 29ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது.
இதற்காக விசேட சபை அமர்வும் கூட்டப்பட்டிருந்தது. எனினும், 20இற்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதாலும் அதில் அரசு திருத்தங்களைச் செய்யவுள்ளதாலும் இம்மாதம் 7ஆம் திகதிவரை விவாதம்  வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆளுகையின் கீழுள்ள ஊவா, தென் ஆகிய மாகாண சபைகள் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை  நிராகரித்துள்ளன. மேல், மத்திய, சப்ரகமுவ உள்ளிட்ட மாகாண சபைகளில் அது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
எனினும், ஜனாதிபதியின் ஆதிக்கத்தின்கீழ் அவை இருப்பதால் ஆதரவைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கின்றது. இதற்காக 20இல் முக்கிய சில திருத்தங்கள் செய்யப்படவள்ளன. ஆனால், வடக்கின் ஆட்சியதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையிலும், கிழக்கின் ஆட்சியதிகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டின் கீழுமே இருக்கின்றன.
வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்காகவே மாகாண சபை முறைமை 1988இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விரு மாகாணங்களிலேயே பரபலாக சிறுபான்மையின மக்கள் வாழ்கின்றனர். எனவே, இவ்விரு மாகாண சபைகளின் ஆதரவும் அரசுக்கு முக்கியம் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால்தான் அரசும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …