துரித விசாரணைகளின்றி நீண்டகாலமாக தேங்கிக் கிடக்கும் ராஜபக்ஷக்களின் விசாரணைக் கோவைகள் தொடர்பில் தமக்கு விசேட அறிக்கையொன்றை விரைவில் சமர்ப்பிக்குமாறு புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.
மேற்படி விசாரணைக் கோவைகளில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கும், இவற்றுக்கு எதிராக ஏன் சட்ட ஏற்பாடுகள் மந்தகதியில் இடம்பெறுகின்றன என்பதை அறிந்துகொள்வதற்காகவுமே நீதி அமைச்சர் விசேட அறிக்கையைக் கோரியுள்ளார் என உயர்மட்ட அதிகாரியொருவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு சட்டஆலோசனைகளைப் பெற்றுக்கொண்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளில் அவர் களமிறங்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிரான வழக்கு விசாரணைகளின்போது நீதி அமைச்சின்கீழ் இயங்கும் சட்டமா அதிபர் திணைக்களம் மந்தகதியில் செயற்பட்டுவருகின்றது என ஆளுங்கட்சி எம்.பிக்களாலேயே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகின்றது.
இதன் பின்னணியில் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவே செயற்பட்டார் என்றும், அவரே ராஜபக்ஷக்களுக்கு எதிரான விசாரணைகளை இழுத்தடித்து வருகின்றார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. நளின் பண்டார அண்மையில் நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
எனினும், உரிய ஆதாரங்கள் சாட்சியங்கள் இல்லாததன் காரணமாகவே வழக்குத் தொடுக்க முடியாதுள்ளது என்றும், நீதித்துறையின் செயற்பாட்டால் தான் தலையிடவில்லை என்றும் முன்னாள் நீதி அமைச்சர் விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய அவன்கார்ட் விவகாரம், ஊவாவின் முன்னாள் முதலமைச்சரால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு (மஹிந்தவின் மனைவி) எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பான கோவைகளே தூசு தட்டப்படவுள்ளன.
விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் பணிப்புரை விடுத்தால் அது அழுத்தமாகவே கருதப்படும். அது நல்லாட்சி கோட்பாட்டுக்கு முரணாக அமையும். எனவேதான், விசாரணைகளின் தன்மை, முன்னேற்றம் பற்றி அறிவதற்காக நீதி அமைச்சர் அறிக்கை கோரியுள்ளார்.
தனது அமைச்சின்கீழ் செயற்படும் திணைக்களத்தின் வினைத்திறன் பற்றி ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அறிக்கை கோருவதற்குரிய அதிகாரம் இருக்கின்றது. இதனடிப்படையிலேயே தலதா கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, நீதி அமைச்சராக நியமனம் பெற்றுள்ள தலதா அத்துகோரள நேற்றுமுன்தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.