இலங்கை மத்திய வங்கியின் பாரிய பிணைமுறி மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க உடனடியாகப் பதவி விலகுவதுடன் இந்த மோசடிக்கான முழுப்பொறுப்பையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஏற்கவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:-
“பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மத்திய வஙகியின் ஆளுநர் பதவியை ரணில் விக்கிரமசிங்க தனது உயிர்த் தோழனான அர்ஜுன் மகேந்திரனுக்கு பெற்றுக்கொடுத்தார். அதன் மூலமாக இந்தப் பிணைமுறி மோசடிக்கு வழிசமைத்துக் கொடுத்தவரும் அவரேதான். அந்த மோசடியில் பிரதான பங்கை வகித்த ரவி கருணாநாயக்கவை ரணில் தொடர்ந்தும் காப்பாற்றி வந்ததாலேயே 2015 பெப்ரவரி 27ஆம் திகதிமுதல் அண்மைக்காலம் வரை இந்தப் பாரிய மோசடி மூடி மறைக்கப்பட்டு வந்தது.
இதுபற்றி நாட்டு மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்ட பின் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து பாரபட்சமற்ற விசாரணைகளுக்கு இடமளித்தார். அந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் ரவி கருணாநாயக்க, அவரது உற்ற தோழன் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அவர்களின் அடிவருடிகளான மத்திய வங்கியின் பல அதிகாரிகள் செய்த மோசடிகள் தெட்டத்தெளிவாக அம்பலமாகின.
இன்றும் ரவியையும், மகேந்திரனையும், அலோசியஸையும் காப்பாற்றவே ரணில் கஜகர்ணம் போட்டுக்கொண்டிருக்கிறார். நாட்டின் பிரதமர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் ரணில் இவ்வாறாக பகற்கொள்ளையர்களுக்கு அபயமளித்து வருவது நாட்டுக்கே அவமானம்.
ரவியின் குட்டு சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், அவர் தனக்கு எதுவுமே ஞாபகமில்லை, தனது மனைவியும் மகளும் சொகுசு வீட்டை வாங்கியதும் தனக்குத் தெரியாது என முழுப்பூசணியை சோற்றில் மறைக்க முயல்வது அமைச்சரான ரவி கருணாநாயக்கவுக்கு அழகல்ல.
அவர் தனது பதவியை உடன் இராஜிநாமா செய்யவேண்டும். அல்லது ஜனாதிபதி அவரது பதவியைப் பறித்து இந்த நாட்டில் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் நீதி நியாயத்தைக் காப்பாற்றவேண்டும்” – என்று அவர் தெரிவித்துள்ளார்.