“கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் சிங்கள, பெளத்த இனவாதம் வடக்கில் அதிகமாகக் குடிகொண்டிருக்கிறது. எமது மக்களின் பொருளாதார வளங்களை கையகப்படுத்துவதன் ஊடாக இன்னொரு பக்க இனப்படுகொலையும் நடைபெற்று வருகின்றது.”
– இவ்வாறு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்
விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.நாவற்குழி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்தப் பரிசளிப்பு நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நாங்கள் தனி நாட்டுக்காகப் போராடிய இனம். எங்களுக்கென்றொரு நாடு வேண்டும். அந்த நாட்டில் கல்வி எப்படி இருக்க வேண்டும்,விளையாட்டு எப்படி இருக்க வேண்டும், எங்களுடைய மக்களுடைய கலாசாரம் எப்படி இருக்க வேண்டும் எனப் பல கனவுகளை கண்ட சமூகம்
நாங்கள்.
எங்களுடைய மக்களுக்காக, எங்களுடைய எதிர்கால சமூகத்துக்காக தங்களுடைய உயிரைத் துச்சமென மதித்துப் போராடிய பல்லாயிரம் போராளிகளின் உயிர்களை விலையாகக் கொடுத்த சமூகம் நாங்கள். எதிரே வரக்கூடிய சமூகம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகவே
அவர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்தார்கள்.
ஆனால், இன்று அந்தச் சம்பவங்கள் நடந்து சூடு ஆறுவதற்கு முன்னரே நாம் அவர்களை மறந்து விட்டோம்.
உண்மையிலேயே நாங்கள் ஒரு விடுதலைக்குப் போராடிய இனமா என்ற கேள்வி எழுகின்றது. இப்போது எல்லோரிடத்திலும் சுயநலங்கள் அதிகரித்துவிட்டன.
எங்களுடைய பிள்ளைகள் இந்த நாட்டில் இலவசமாக கல்வி கற்கின்றார்கள். குறைந்த பட்சம் இரண்டு, மூன்று ஆண்டுகள் எமது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற மனோநிலை பிள்ளைகளுக்கு வரவேண்டும்.
வடக்கு, கிழக்கில் வாழும் எமது மக்களுக்கு சேவையாற்றும்போது அது எமது மக்களுக்குத்தான்
சேவை செய்கின்றோம் என்கின்ற மனோ நிலை உருவாக வேண்டும்.
இவ்வாறான பரந்த சிந்தனை இப்போது இல்லாமையே எங்களுடைய தோல்விக்குக் காரணம் என்று நான் நினைக்கின்றேன். எனவே, எங்களுடைய சிந்தனையில் மாற்றம் தேவை.
கலாசாரத்தை அழிக்கும் நோக்கில் சிங்கள, பெளத்த இனவாதம் வடக்கில் அதிகமாகக் குடிகொண்டிருக்கிறது. எமது மக்களின் பொருளாதார வளங்களைக் கையகப்படுத்துவதன் ஊடாக இன்னொரு பக்க இனப்படுகொலை நடைபெற்று வருகின்றது.
இவற்றிலிருந்த நாங்கள் மீண்டெழுந்து எங்களுடைய மண்ணைப் பாதுகாத்து, நாங்கள் இந்த மண்ணின் ஆதிக்குடிகள் என்பதையும் இங்கே நாங்கள் எங்களுடைய சுய கெளரவத்துடன் வாழ்வதற்கு எங்களுடைய மாணவர்களை நாங்கள் தயார் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாணவனும் ஒவ்வோரு துறையில் சிறந்த வல்லுநராக வரவேண்டும்” – என்றார்.