கிளிநொச்சியில் 2010ஆம் ஆண்டில் கரைச்சிப் பிரதேச சபையினால் சந்தை அமைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட 5 கழிப்பறை வசதிகள் கொண்ட பிரதேசம் 6 ஆண்டுகளாகப் பூட்டிய நிலையில் காணப்படுகின்றது எனவும் இதனால் கழிப்பறைகளும் பாழடைகின்றன எனவும் சுட்டிக்காட்டப்படு கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் போருக்குப் பின்னர் மீளக்குடியமர்ந்த காலத்தில் மக்கள் போக்குவரத்து இடையூறு காரணமாக வாழ்விடங்களுக்கு அண்மையில் தமக்கான அங்காடிகளை அமைக்க முற்பட்டவேளையில் கரைச்சிப் பிரதேச எல்லைப் பரப்புக்குள் ஏ- 9 வீதியின் அருகே கரடிப்போக்குச் சந்தியில் இடம்தேர்வு செய்யப்பட்டு அதற்கான வசதி வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டன.
இதன் பிரகாரம் 2010ஆம் ஆண்டில் சபையின் நிதியில் அப்போதைய ஆணையாளரின் சிபாரிசுடன் குறித்த காணி சீர்செய்யப்பட்டு 5 கழிப்பறைகளும் ஏற்படுத்தப்பட்ட நிலையில் சந்தை ஆரம்பிக்கப்படாமையினால் அந்தப் பகுதி பயன்பாடு அற்றுப்போனது. பிரதேசம் பூட்டிய நிலையில் காணப்பட்டது.
இதனால் குறித்த பகுதியில், பற்றைகள் வளர்ந்தும், கழிப்பறைகளும் சேதமடையும் நிலை உருவாகியுள்ளது என 2015ஆம் ஆண்டு சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது குறித்த காணியில் அங்காடி அல்லது வர்த்தக நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச சபையினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாகப் பிரதேசம் துப்பரவு செய்யப்பட்டது.