காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி அவர்களின் உறவுகளின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்கின்றன.
வடக்கில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 44ஆவது நாளாகவும் தொடர்கின்றது. தீர்க்கமான முடிவு கிடைக்கும் வரையில் போராட்டக் களத்தில் இருந்து அகலப் போவதில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
வவுனியா நகரில் காணாமல்போனோரின் உறவுகள், இன்று 40 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்று வரும் போராட்டம் இன்று 28ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
வடமராட்சி கிழக்கில் காணாமல்போனோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டமும் இன்று 21ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
அதேவேளை, கிழக்கில் திருகோணமலையில் இன்று 31ஆவது நாளாகவும் காணாமல்போனோரின் உறவுகளின் போராட்டம் தொடர்கின்றது.
இதேவேளை, கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல்போனோரின் உறவுகளை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை நேரில் சென்று சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.