Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கால இழுத்தடிப்புக்கு 2 வருட அவகாசத்தை பயன்படுத்தக்கூடாது! – அரசிடம் வலியுறுத்தியது சர்வதேச மன்னிப்புச் சபை

கால இழுத்தடிப்புக்கு 2 வருட அவகாசத்தை பயன்படுத்தக்கூடாது! – அரசிடம் வலியுறுத்தியது சர்வதேச மன்னிப்புச் சபை

* சர்வதேச பங்களிப்புடன் கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். 

* குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
* வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்.
* பொதுமக்களின் காணிகள் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.
* காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும்.

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்ட கால அவகாசத்தை, கால இழுத்தடிப்புக்காக இலங்கை அரசு பயன்படுத்தக்கூடாது. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வழங்கப்பட்ட காலத்தை பயன்படுத்த வேண்டும். இதனைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்துள்ளோம்.”

– இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலர் ஷெயில் ஷெட்டி தெரிவித்தார்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஷெயில் ஷெட்டி தலைமையிலான குழுவினர், வடக்குப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு இதழியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் – அங்கீகரிக்கமாட்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை அரச தரப்பினர் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலர் ஷெயில் ஷெட்டி,

“அரசியல்வாதிகள் வேறுபட்ட கருத்துக்களைச் சொல்ல முடியும். இறுதிப் போரில் பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன . இதன் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும். அதற்கு சர்வதேச பங்களிப்புடன் கூடிய கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கால இழுதடிப்புக்குப் பயன்படுத்தக் கூடாது. ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கே பயன்படுத்த வேண்டும். இதனைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளோம்.

வடக்கு மாகாணத்தில் நடைபெறும் போராட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம். வடக்கில் அதிகளவு இராணுவப் பிரச்சன்னத்தைக் காணமுடிகின்றது. இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும். இராணுவத்தினர் வசமிருக்கும் மக்களின் காணிகள் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.

காணாமல்போனோர் விடயங்களையும் ஆராய்ந்துள்ளோம். இது மிகவும் முக்கிய விடயம். ஒருவர் காணாமல்போயிருப்பினும் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். சர்வதேச பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …