தற்போது தெற்கு பிரான்சின் Trèbes (Aude) இல் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் பயங்கரவாதி ஒருவன் நுழைந்துள்ளான்.
பல்பொருள் அங்காடியைச் சுற்றி GIGN, RAiD மற்றும் CRS படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக குறித்த பயங்கரவாதி Trèbes பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபடுக்கொண்டிருந்த CRS படையினரை மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதாகவும், இதன்போது நான்கு அதிகாரிகள் காயமடைந்ததாகவும் அறியமுடிகிறது.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர், பயங்கரவாதியை துரத்திச் செல்ல, பயங்கரவாதி தப்பி ஓடி 11.30 மணி அளவில், Trèbes இல் உள்ள Super U பல்பொருள் அங்காடிக்குள் ஆயுதத்துடன் நுழைந்துள்ளான். ‘நான் தயேஸ் (பயங்கரவாதிகள்) இராணுவத்தைச் சேர்ந்தவன்!’ என கோஷமிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்பொருள் அங்காடியைச் சுற்றி GIGN மற்றும் RAiD அதிரடிப் படையினர் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்துள்ளனர். இரண்டு உலங்கு வானூர்திகளும் வட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் பின்னர் வழங்கப்படும்.
பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்! – மூவர் பலி! – இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் உரிமை கோரினர்!!
தெற்கு பிரான்சின் Trèbes பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் பிணையக்கைதிகளை பிடித்து வைத்திருந்த பயங்கரவாதி GIGN படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.
பயங்கரவாதியால் மொத்தமாக மூவர் கொல்லப்பட்டும், இருவர் காயமடைந்தும் உள்ளனர். மொராக்கோ நாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய பயங்கரவாதி, இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் சுட்டுக்கொல்லபட்டுள்ளான்.
பயங்கரவாதியால் மொத்தமாக மூவர் கொல்லபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக மகிழுந்து ஓட்டுனர் ஒருவர் சுடப்பட்டு, சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர், நடைபயிற்சி முடித்துவிட்டு தன் சக வீரர்களோடு திரும்பிக்கொண்டிருந்த CRS அதிகாரிகளை நோக்கி சுட்டுள்ளான். அதிகாரிகள் அந்த சமயத்தில் துப்பாக்கிகள் அற்று இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Carcassonne இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பின்னர் அங்கிருந்து தப்பியோடிய பயங்கரவாதி, CRS படையினரால் துரத்தப்பட, Trèbes, (Aude) இல் உள்ள Super U பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து பிணையக்கைதிகளை பிடித்து வைத்துள்ளான். அங்காடிக்குள் மேலும் இருவரை சுட்டுக்கொன்றதாக அறிய முடிகிறது.
பின்னர் அங்காடியை சுற்றிவளைத்த GIGN, RAiD மற்றும் CRS படையினர், இறுதியாக பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுள்ளனர்.
கொல்லப்பட்ட Redouane Lakdim என பெயருடைய குறித்த 25 வயதுடைய மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவன் எனவும், அவனை முன்னதாகவே பிரெஞ்சு உளவுத்துறையினர் நன்கு அறிந்துள்ளனர் எனவும் அறியமுடிகிறது.
கிடைக்கப்பெற்ற மேலதிக தகவல்களில், நவம்பர் 13 தாக்குதலில் கைது செய்யப்பட்ட சாலா அப்தெல்சலாமை விடுவிக்கக்கோரி பயங்கரவாதி கோரிக்கை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தாம் தான் நடத்தியதாக இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் உரிமைகோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.