நாடு முழுவதும் ஒரே மறைமுக வரியாக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கோஷத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வரி முறையை ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்வகித்து வருகிறது.
இந்த வரி முறையில் இருந்து உணவு தானியங்கள், பால், பழம் உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி பொருட்களுக்கு, சேவைகளுக்கு 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி முறை அமலுக்கு வந்த பின்னர், பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹாஸ்முக் ஆதியா, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
உற்பத்தி வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் 12–க்கும் மேற்பட்ட வரிகளுக்கு ஒரே வரி முறையாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை உள்ளது.
இந்த வரி விதிப்பு முறை ஒவ்வொருவருக்கும் புதியதுதான். எனவே, மாற்றங்களை எல்லாம் செய்து முடித்து, இது ஒரு நிலையான தன்மையை அடைவதற்கு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எடுக்கும்.
இந்த வரி விகித கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எங்கெல்லாம் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களும், சாமானிய மனிதர்களும் கடும் சுமையால் பாதிப்புக்கு ஆளாகிறார்களோ, அங்கெல்லாம் அந்த சுமையை குறைக்க வேண்டும். அப்போதுதான் ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை இணக்கமானதாகவும், சிறப்புடன் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாகவும் அமையும்.
வரி விகித கட்டமைப்பை மாற்றி அமைக்கிறபோது, தகுதி குழுவின் கணக்கீடுகள் தேவைப்படும். இந்த குழுதான், எந்தப்பொருள் அல்லது சேவையின் வரி விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும். எனவே இந்த தகுதிக்குழு ஒரு மாத காலம் வேலை செய்ய வேண்டும்.
அதைத் தொடர்ந்து கவுகாத்தியில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நவம்பர் 10–ந்தேதி நடக்கிறபோது அல்லது அதற்கு பின்னர் மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்க முடியும்.
கூடிய விரைவில் இந்த மாற்றங்களை கொண்டு வருவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இது, தகுதிக்குழு எவ்வளவு காலம் அவகாசம் எடுத்துக்கொள்கிறதோ, அதைப் பொருத்துத்தான் அமையும். அவர்களுக்கு புள்ளி விவரங்கள், வருவாய் இழப்பு கணக்கீடுகள் எல்லாம் தேவைப்படும். அவர்களுக்கு பல்வேறு ஒப்பீடுகளும் அவசியம். ஆனால் இந்த வரி விதிப்பு முறையில் எல்லோரிடமும் ஒத்திசைவை ஏற்படுத்தியே ஆக வேண்டும். இந்த வகையில் முழுமையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.