அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான ஆதரவை வழங்கும் விடயத்தில் மாகாண சபைகள் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், அனைத்து மாகாண சபை முதலமைச்சர்களுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் அவசரமானதும், முக்கியத்துவமானதுமான சந்திப்பொன்றை நடத்தியிருக்கிறார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. ஆனால், வடக்கு ஆளுநர் உட்பட அனைத்து மாகாண முதலமைச்சர்களும், ஆளுநர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான மாகாண சபையினது அங்கீகாரத்தின் அவசியத்தை இதன்போது வலியுறுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இதன் முக்கியத்துவம் குறித்து விலாவாரியாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசமைப்புத் திருத்தங்களைச் சீராக செய்வதற்கு ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவதற்கும், புதிய அரசமைப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் இது முதற்படி என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, மாகாண சபைகளின் ஆயுட்காலம் நீடிக்கப்படும்போதே அதன் நிர்வாகம் ஆளுநரின் கீழ் அல்லாமல் முதலமைச்சரின் கீழ் இருக்கும் எனவும் எடுத்துக் கூறியுள்ளார்.
பெரும்பாலான முதலமைச்சர்கள் இந்தச் சந்திப்பின்போது தங்களுக்குள்ள சந்தேகங்களை விலாவாரியாகக் கேட்டறிந்துகொண்டுள்ளனர் என அறியமுடிகின்றது.
ஏற்கனவே, ஊவா மாகாண சபையில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து இந்தச் சந்திப்பின்போது விரிவாகப் பேசப்பட்டுள்ளது. 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்தும், அதன் தாற்பரியங்கள் குறித்தும் போதிய விளக்கமின்மையே இதன் தோல்விக்கான காரணம் என்று ஊவா மாகாண முதலமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.