லதிமுக என்கிற தனது கட்சி பெயரை இதிமுக என பெயர் மாற்றம் செய்துள்ளார் டி.ராஜேந்தர்.
நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்திர், தமிழக மக்களை காக்க நாளை முக்கிய முடிவை எடுக்க இருக்கிறேன் எனக் கூறியிருந்தார். அதன்படி, இன்று 11 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
அந்த பெயர் பலகையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தது. ஒரு அறிக்கையை படித்தார். அதில் கூறப்பட்டிருந்தாவது:
தொடக்கத்தில் திமுகவிற்காக பாடுபட்டேன். என்னை அதிமுகவில் இணையும் படியும் எனக்கு இணை செயலாளர் பதவி கொடுப்பதாகவும் ஜெயலலிதா கூறினார். ஆனால், நான் கருணாநிதியை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் எனக் கூறினேன்.
ஆனால், சொற்ப காரணத்தை கூறி என்னை திமுகவில் இருந்து நீக்கினர். அதனால், லதிமுகவை தொடங்கினேன். தற்போது அக்கட்சியை இதிமுக என பெயர் மாற்றம் செய்துள்ளேன். புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு, இதிமுகவை தொடர்ந்து நடத்துவேன். திமுகவிற்கு இனிமேல் எந்த எதிர்காலமும் இல்லை” என அவர் தெரிவித்தார்.
ஜெ.வின் படத்தை தனது கட்சி பெயர் பலகையில் சேர்த்து அதிமுகவிற்கு எதிராக இதிமுகவை டி.ராஜேந்தர் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.