கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்த தம்பதியர் மீது இன்று பிற்பகல் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் கணவன் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த தம்பதியர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஹோட்டலின் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில், குறித்த தம்பதியர் ஹோட்டலை ஒப்படைத்துவிட்டு, ஹோட்டல் உரிமையாளரிடம் முற்பணத்தைக் கோரியுள்ளனர். அதன்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், உரிமையாளர் மேற்படி தம்பதியர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் உதயநகர் மேற்கைச் சேர்ந்த நாகராசா திருக்குமார் (வயது – 45) என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி திருக்குமார் கிருஷ்ணவேணி (வயது – 40) படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.