Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ’20’ இற்கு வலுக்கிறது எதிர்ப்பு! திருத்துகிறது அரசு!! கிழக்கில் 7இல் வாக்கெடுப்பு; வடக்கில் 4இல் பலப்பரீட்சை

’20’ இற்கு வலுக்கிறது எதிர்ப்பு! திருத்துகிறது அரசு!! கிழக்கில் 7இல் வாக்கெடுப்பு; வடக்கில் 4இல் பலப்பரீட்சை

மாகாண சபைகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்து அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துவருவதால் அதில் முக்கிய சில திருத்தங்களைச் செய்வதற்கு அரசு அவசரமாக தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.

மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும் சகல மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு வழிவகுக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பில் மாகாண சபைகளின் அனுமதியையும் அரசு கோரியுள்ளது. இதன்படி 20 மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்றுவருகின்றது.

மத்திய அரசின் உத்தேச சட்டவரைபை ஊவா மாகாண சபை தோற்கடித்துள்ளது. ஒப்புதல் அளிப்பதற்கு தென்மாகாண சபையும் மறுத்துவிட்டது. மேல்மாகாண சபையிலும் சர்ச்சைநிலை உருவாகியுள்ளது. வடமேல் மாகாண சபை மாத்திரமே இதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இந்நிலையில், குறித்த சட்டமூலம் நேற்றுமுன்தினம் கிழக்கு மாகாண சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விவாதம் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்றுமுன்தினம் காலை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளில் 20ஆவது திருத்தச் சட்டமூலம் கடும் எதிர்ப்பை சந்தித்தமை, சிவில்
அமைப்புகள் சில அதற்கு போர்க்கொடி தூக்கியமை போன்ற காரணங்களால் அதில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு உத்தேசித்துள்ள அரசு, அதனை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டத்தில் இரகசியமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையடுத்தே கிழக்கு மாகாண சபை மேற்படி சட்டவரைபு மீதான விவாதத்தை 7ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளது.

இதன்படி

1. மாகாணசபைத் தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் சட்டம் நிறைவேறினாலும் அந்தத் திகதிக்கு முன்னர் ஆயுட்காலம் முடிவடையும் மாகாண சபைகள் முதல்வரின் ஆட்சியின்கீழ் தேர்தல் திகதிவரை நீடிக்கும்.

2. 2019ஆம் ஆண்டில் கட்டாயம் தேர்தல் நடத்தப்படும் என்ற உத்தரவாதம்
ஆகிய திருத்தங்களே கொண்டுவரப்படவுள்ளன.

மாகாண சபைகளின் விடயதானங்களுடன் தொடர்புடைய சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு முன்னர் அதற்கு மாகாண சபைகளின் அங்கீகாரத்தை அரசு பெறவேண்டும்.

எனவே, மேற்கண்ட திருத்தங்களை உள்வாங்கிய பின்னர் ஏலவே புதிய சட்டவரைபு தோற்கடிக்கப்பட்ட சபைகளுக்கு மீள் விவாதத்துக்காக அவை அனுப்பிவைக்கப்படவுள்ளன எனவும் தெரியவருகின்றது.

அதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் மீது எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …