விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
விவசாயிகள் தற்கொலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில் வறட்சி மற்றும் புயலால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு இழப்பீடு தொகை வழங்கினாலும் அதிகப்படியாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று கோர்ட்டு கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்று மத்திய அரசு வக்கீலை நோக்கி தெரிவித்தார். அதற்கு மத்திய அரசு வக்கீல் தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தார்.
உடனே நீதிபதிகள் இழப்பீடு வழங்குவது மட்டும் போதாது, அந்த குடும்பங்கள் படும் துயரங்களை நினைத்து பார்க்க வேண்டும், தற்கொலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதற்கு அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு வக்கீல் கேட்டதை தொடர்ந்து 2 வாரம் அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.