ஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி
காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக செல்லவுள்ளனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கங்களின் தலைவி கலாஞ்சனி, செயலாளர் லீலா, மற்றும் அனந்த நடராஜா, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலநாயகி ஆகியோரும் ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளனர்.
அடுத்துவரும் நாட்களில் ஜெனீவா செல்லும் இவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் செய்வதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஐ.நா அரங்கினுள் கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர்.
அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் செவ்வாய்க்கிழமை ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளதோடு தமிழ் மக்கள் சமகாலத்தில் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உட்பட பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.