Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யுத்தம் முடிந்தும் யுத்தகாலக் கஷ்டங்களுடனேயே வாழ்ந்துவரும் மக்கள்!

யுத்தம் முடிந்தும் யுத்தகாலக் கஷ்டங்களுடனேயே வாழ்ந்துவரும் மக்கள்!

கிழக்கில் யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்ட போதும் ஏறாவூர்ப்பற்று பதுளை வீதியை அண்டி வாழும் மக்கள் முடிவின்றித் தொடரும் யுத்தகால அவலங்களுடனேயே வாழ்ந்து வருவது ஆய்வறிக்கைகளில் கண்டறியப்பட்டுள்ளது என ‘சொன்ட்’ அமைப்பு அறிவித்துள்ளது.

குறித்த பகுதியில் வாழும் மக்களின் நிலை தொடர்பில், ‘சொன்ட்’ அமைப்பின் மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் தர்மரெட்னம் விஜயகுமார் இந்த ஆய்வறிக்கையை இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளார்.

இந்த ஆய்வறிக்கையில் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பெண்கள் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சன சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட சுமார் 15 இற்க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த மக்கள் காலாகாலமாக எதிர் நோக்கும் காட்டு யானைகளின் தொல்லை, குடிநீர்ப்பிரச்சினை, வீதிகள் சீரின்மை. மேய்ச்சல் தரையில் அத்துமீறல், உள்ளூர் கிராம மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமை, கருங்கற் சுரங்கங்கள் வெடி வைத்துத் தகர்க்கப்படுவதால் ஏற்படும் பக்கப் பாதிப்புக்கள், மணல், காட்டு மரங்கள் ஆகியவை அழிக்கப்படல், வறட்சி, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் மக்கள் மீண்டெழ முடியாத வாழ்வாதாரப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளை மக்களிடம் அதிகாரிகள் கேட்டறிவதில்லை என்றும் அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைக் கூட அதிகாரிகள் அலட்சியம் செய்து விடுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிலவேளை மக்களின் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக மக்கள் நலன் சார்ந்த ஒன்றிரண்டு வேலைத் திட்டங்களை அதிகாரிகள் வெறுமனே கண்துடைப்புக்காகத் ஆரம்பித்து வைக்கின்றனர். ஆனால் அவற்றை முடிவுறுத்துவதில்லை.

மட்டக்களப்பு – பதுளை பிரதான வீதியிலிருந்து மாவளையாறு, இராஜபுரம், சின்னப் புல்லுமலை கிராமங்களுக்கு உட் செல்வதானால் கிட்டத்தட்ட 03 கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டும்.

குறிப்பிட்ட இந்த வீதிகளுக்கு 300 மீற்றர், 500 மீற்றர் தூரம் வரைதான் கொங்கிரீட் இட்டுள்ளார்கள் வீதியின் ஏனைய பகுதியெல்லாம் குன்றும் குழியுமாக உடைந்து படு மோசமாக உள்ளது. இந்த நிலையில்தான் இங்குள்ள பெரும்பாலான உள் வீதிகள் காணப்படுகின்றன.

மாவளையாறு கிராமத்தில் 50 குடும்பத்தவர்கள் வசிக்கின்றார்கள். அங்கிருந்து வைத்தியசாலைக்கு செல்வோர், கற்பிணிபெண்கள், தொழிலுக்கு செல்வோர், பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் குன்றும் குழியுமாகக் கிடக்கும் இந்த வீதியையே பயன்படுத்துகின்றார்கள்.

யானை வேலி அமைப்பதற்கான திட்டத்தின் கீழ் குறித்த இடங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் துப்புரவு செய்யப்பட்டது. ஆனால் இன்னமும் யானைத் தடுப்பு வேலி அமைக்கப்படவில்லை.

அந்த இடத்தில் திரும்பவம் பற்றைக் காடுகள் வளர்ந்து விட்டன. இத்தகைய போக்குக் குறித்து அதிகாரிகள் அக்கறை காட்ட வேண்டும். என்பதை எமது ஆய்வறிக்கையின் முடிவில் தெரிந்து கொண்டோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …