கால அவகாசம் ஐ.நாவின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கிறது
ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஸ்ரீலங்காவிற்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்படுவது தற்போது உறுதியாகியுள்ள நிலையில், சர்வதேசத்தின் இந்த நகர்வானது ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுப்பதாக அமைந்திருப்பதாக தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் தொழிற் சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து ஐ.நா மனித உரிமை பேரவைக்கு போரினால் பாதிக்கப்பட்ட இவர்கள் விடுத்துள்ள கூட்டு விண்ணப்பத்தில், சர்வதேச நீதிபதிகளை ஜனாதிபதியும், பிரதமரும் முற்றாக நிகாரித்துள்ள நிலையில் 34 ஆவது கூட்டத்தொடரில் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை என்பது, வெற்றுவார்த்தைகளால் புனையப்பட்ட ஒன்று என்றும் அனைவரையும் பிழையாக வழிநடத்துகின்ற ஒன்று என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து தற்போது ஜெனிவா மனித உரிமை பேரவை நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ள மன்னார் பிரஜைகள் குழுவின் நிறுவனர் அருட்தந்தை இமானுவல் செபமாலை மேலதிக கால அவகாசமொன்றினை ஸ்ரீலங்காவிற்கு வழங்குவதென்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அதன் சாட்சிகளாக உள்ளவர்களுக்கும் ஆபத்தானதாகவே அமையும் என்று தெரிவித்தார்.
இதே கருத்தினையே திருகோணமலையிலிருந்து ஐ.நா மனித உரிமைக்கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள அருட்தந்தை பிரபாகரும் தெரிவித்தார்.
கால நீடிப்பினை வழங்கக்கூடாது என்று கோருவது போரினால் பாதிக்கப்பட்ட மக்களே என்றும் அதற்குச் சார்பாகக் குரல்கொடுப்போர் தென்னிலங்கையைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களே என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தள்ளார்.
இவ்வார ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றிய, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஐ.நா தீர்மானத்தினை நிறைவேற்ற ஜெனீவாவில் ஸ்ரீலங்காவிற்கு மேலும் இரண்டு வருடகால நீடிப்பினை வழங்குவது அவசியம் என்றும் இதற்கு எதிராகக்குரல் கொடுப்பது முட்டாள்தனம் என்றும் தெரிவித்தார்.
சிறிலங்காவிற்கு கால நீடிப்பினை வழங்குவது குறித்து நேற்று முந்தினம் ஜெனிவாவில் அமெரிக்கா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற தமிழர்தரப்பு இந்தக் காலநீடிப்பு வழங்கப்படக்கூடாது என்று ஒருமித்த குரலில் தெரிவித்திருக்கிறார்கள். இதனை இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் அகதிகள் பேரவை பிரதிநிதி அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இந்தக் கருத்தினை வன்மையாகக் கண்டித்த அருட்தந்தை இமானுவல் செபமாலையும், அனந்தி சசிதரனும், தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் நிலைப்பாட்டினைப் பிரதிபலிக்காது எதேச்சையாகச் செயற்பது மிகவும் வருந்தத்தக்கது என்றும் தெரிவித்தனர்.




