Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஐ.நாவும் அரசும் பதில் கூற நேரிடும்! – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எச்சரிக்கை

எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஐ.நாவும் அரசும் பதில் கூற நேரிடும்! – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எச்சரிக்கை

“காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஐ.நாவும் இலங்கை அரசுமே முழுப் பொறுப்பு.”

– இவ்வாறு தமிழர் தாயகத்தில் அறவழியில் தொடர்ந்து போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறும், அவர்களுடைய உண்மையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் பரவலாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 5 மாவட்டங்களில் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டங்கள் இன்றும் தொடர்கின்றன. வடக்கின் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலை மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலிறுத்தியே அவர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

“எமக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எம்மை வீதியில் விட்டு வேடிக்கை பார்ப்பதை விடுத்து, எமக்குத் தீர்வு பெற்றுத்தர வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உறவினர்கள் உறுதியுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தப் போராட்டங்களுக்கு நாளுக்கு நாள் பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் தலைவர்கள், இளைஞர் அணியினர் என ஆதரவுகளும் வலுவடைகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 33 ஆவது நாளாகவும், வவுனியா மாவட்டத்தில் 29ஆவது நாளாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 17ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் 10 ஆவது நாளாகவும், கிழக்கில் திருகோணமலையில் 20ஆவது நாளாகவும் போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் அனைவருடைய கோரிக்கைகளும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? இருந்தால் எங்கு உள்ளனர்?, இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள் என்பதாகவே உள்ளது.

நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை இவ்வாறு தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், சில வேளைகளில் தங்களின் போராட்டத்தின் வடிவத்தை மாற்றி எதிர்வரும் நாட்களில் போராட வேண்டி வரும் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரித்தனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …