கருணாநிதியின் உடல்நலம் குறித்து சோனியா நலம் விசாரிப்பு
தி.மு.க., தலைவர், கருணாநிதியின் உடல்நலம் குறித்து, காங்., தலைவர், சோனியா நலம் விசாரித்ததாக, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க.செயல் தலைவர், ஸ்டாலின் நேற்று, டில்லியில் காங்., தலைவர் சோனியாவை அவர் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, காங்., துணைத் தலைவர் ராகுலும் உடன் இருந்தார்.
பின், சென்னைக்கு கிளம்பியபோது, நிருபர்களிடம், ஸ்டாலின் கூறியதாவது: காங்., தலைவர் சோனியாவை, மரியாதை நிமித்தமாக சந்திக்க அவர் இல்லத்திற்கு, நேரில் சென்றிருந்தேன். அவர் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அப்போது, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து, அக்கறையுடன் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலை குறித்து, இருவரும் பேசினோம்.
ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டுமென்று, தி.மு.க., சார்பில், ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். இதுகுறித்து, மத்திய அமைச்சரை, டில்லியில் சந்திக்க முயன்றோம். விடுமுறை என்பதால், அவரை சந்திக்க இயலவில்லை. இவ்விஷயம் குறித்து, பார்லிமென்டில், தி.மு.க., – எம்.பி.,க்கள், குரல் எழுப்புவார்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.