வடமாகாண சபையின் கிளிநொச்சி கட்டிடம் ஊடக விபசாரிகளுக்கு பதிலடி
ஊடக விபசாரங்களை நடத்துகின்றவர்களுக்கு பாடம் புகட்டும் முகமாகவே வடமாகாண சபை, கல்வியை வளர்த்துச் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார்.
வடமாகாண சபை பல கட்டிடங்களைக் கட்டுவதாகவும், கல்வியை வளர்த்துச் செல்வதாகவும் குறிப்பிட்ட அவர், ஒரு நவீன காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒருமாடி வகுப்பறை கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத் தொகுதியே இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இதனைக் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், நாட்டில் நீண்ட காலமாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் விளைவாக உயிர்சேதம், பொருட்சேதம், இருப்பிடம் அனைத்தையும் இழந்தும் தமிழ் மக்கள் தலைதூக்கி நிற்பதற்கு கல்வியே அடிப்படைக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நெற்களஞ்சியசாலை கட்டிடங்கள் இரண்டில் இயங்கிய வடக்கச்சி ஆரம்ப பாடசாலையானது, தற்போது அனைத்து சமூக நலன் விரும்பிகளின் உதவியுடன் புதுப்பொழிவு பெற்று வருவதாக பாடசாலை அதிபா் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பாடசாலை அதிபா் அ. பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினா்களான வி. தவநாதன், ப. அரியரத்தினம், எஸ். பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளா் க. முருகவேல் மற்றும் ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியா்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.