Saturday , October 18 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சரணடைந்த போராளிகள் விவகாரம்: சவேந்திர சில்வா மீதும் திரும்புமா விசாரணை?

சரணடைந்த போராளிகள் விவகாரம்: சவேந்திர சில்வா மீதும் திரும்புமா விசாரணை?

வன்னியில் இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான வழக்கில் 58ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை விடுப்பதா, இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை முல்லைத்தீவு நீதிமன்றம் அடுத்தமாதம் அறிவிக்கவுள்ளது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த வழக்குடன் தொடர்புபட்டுள்ளதால் அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வியாக்கிழமை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட இறுதிப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மீதான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

போரில் சரணடைந்தவர்கள் தொடர்பாக ஏற்கனவே கூறியது போன்று புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களது பட்டியலே தவிர, அப்போது 58ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக செயலாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கே தெரியும் என்று நீதிமன்றில் முன்னிலையாகிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சானக்ய குணவர்தன சாட்சியமளித்தார்.

இந்தநிலையில், காணாமல்போனவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகியிருந்த சிசிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல், விடுதலைப்புலிகள் உட்பட அந்த அமைப்பின் முக்கியஸ்தர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்த விவகாரத்தில் போரில் முக்கிய பங்காற்றிய 58ஆவது படைப்பிரிவின் கட்டடைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனவர் சவேந்திர சில்வாவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்காக அவரை மன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான அழைப்பாணையைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் இன்று மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எனினும், இதன்போது குறுக்கிட்ட அரச தரப்பு சட்டத்தரணி இந்தக் கோரிக்கைக்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இந்த வழக்குடன் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லை என்று தெரிவித்த அரச தரப்பு சட்டத்தரணி, அவருக்கு எதிராக அழைப்பாணையை நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது என்ற வலுவான வேண்டுகோளையும் மன்றில் முன்வைத்தார்.

எவ்வாறாயினும் இறுதிப்போரில் 58ஆவது படைப் பிரிவே முக்கிய பங்காற்றியதோடு படையினரிடம் சரணடைந்த விவகாரம் தொடர்பில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று சட்டத்தரணி ரட்ணவேல் வலியுறுத்தினார்.

இதனைக் கவனத்தில்கொண்ட நீதிவான் எஸ்.எம் சம்சுதீன், இந்த வழக்கு மீதான விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிவரை ஒத்திவைத்ததோடு இந்தக் கோரிக்கை தொடர்பில் நீதிமன்றத்தின் முடிவை அன்றைய தினம் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, 2009ஆம் ஆண்டு ஆயுதப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு பதவி உயர்வு கிடைத்ததோடு, அவர் அமெரிக்காவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …