இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தை செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்ததினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நினைவு கூறப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் தலைமையில் இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் துரையப்பபா விளையாட்டரங்கிற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் க.கமலேஸ்வரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரது சமாதிக்கு மலர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
அத்துடன் தமிழரசுக்கட்சியின் தலைவரான செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்ததினம் இன்று வவுனியா நகர மத்தியில் உள்ள அவரது சிலையடியில் வட மாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை தலைவருமான ப. சத்தியலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சிலைக்கு மலர் மாலை அணிவத்ததுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் சுகாதார அமைச்சரினால் நினைவுரையும் நடத்தப்பட்டது.
இதன்போது தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மட்டக்களப்பு இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட பணிமனையில் தந்தை செல்வாவின் பிறந்ததின நிகழ்வு இடம்பெற்றதுடன் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது.