ராணுவப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரம் – மனோகர் பரிக்கரை சாடும் சிவசேனா
ராணுவப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரத்திற்கு பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பரிக்கர் பொறுப்பேற்க வேண்டும் என சிவசேனா கட்சி கடுமையாக சாடியுள்ளது.
ராணுவ பலத்தில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு படை பணியில் சேர நாடு முழுவதும் இன்று எழுத்து தேர்வுகள் நடைபெற்று வந்தது. மராட்டிய மாநில தலைநகரான மும்பையை அடுத்துள்ள தானே பகுதியில் நடைபெறவுள்ள தேர்வுகளில் பங்கேற்க வந்தவர்களில் சிலர், தேர்வு மையங்களுக்கு செல்லாமல் தாங்கள் தங்கியிருந்த லாட்ஜ் அறைகளில் இருந்தவாறே தேர்வுகளை எழுதிகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வினாத் தாள்கள் வெளியானது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, புனே மண்டலத்தில் நடந்த ராணுவ ஆள்சேர்ப்புக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பிய இச்சம்பவத்திற்கு பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பரிக்கர் பொறுப்பேற்க வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,” பல்கலைக்கழக தேர்வுகளை தொடர்ந்து, ராணுவப் பணியாளர் தேர்வுகளின் வினாத்தாள் வெளியாவது இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மனோகர் பரிக்கர் கோவாவின் முதல்வராக ஆசைப்படுகிறார். ஆனால், தற்போது அவரது பணியை சரியாக செய்ய மறுக்கிறார். இச்சம்பவத்திற்கு அவரே பொறுப்பு” என காரசாரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
மேலும், ராணுவத்தை பெருமையாக பேசும் பிரதமர் மோடியால் ஒரு தேர்வை கூட முறையாக நடத்த முடியவில்லை எனவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக சிவசேனா – பா.ஜ.க. இடையே விரிசல் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.




