Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகள்: மத்திய அரசே பொறுப்பு என்கிறார் வடக்கு முதல்வர் விக்கி

மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகள்: மத்திய அரசே பொறுப்பு என்கிறார் வடக்கு முதல்வர் விக்கி

“மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க வேண்டியது, மத்திய அரசின் கடப்பாடு. அதில் நாம் தான்தோன்றித்தனமாகத் தலையீடு செய்ய இயலாது. அவ்வாறு மத்திய அரசு தனது கடப்பாட்டைச் செய்யவில்லை என்பதை, மக்கள் எமக்கு எழுத்துமூலமாகத் தெரியப்படுத்தினால், அது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி மக்களுக்குரிய உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு, எங்களால் ஆவன செய்ய இயலும்.”

– இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பிலக்குடியிருப்பு மக்கள், தமது சொந்த நிலத்தில் தம்மை மீள்குடியேற்றக் கோரி ஒரு மாதம் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். இதன் விளைவாக மார்ச் மாதம் 01ஆம் திகதி, விமானப்படையின் கட்டுப்பாட்டிலிருந்த மக்களுடைய நிலங்கள் மக்களிடம் வழங்கப்பட்ட நிலையில், 84 குடும்பங்கள் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறினர்.

இந்நிலையில் மீள்குடியேறிய மக்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் வழங்கப்படாத நிலை தொடர்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மத்திய, மாகாண அரசுகள் சார்ந்த எந்தவோர் அரசியல்வாதியும், தமக்கான உதவிகளை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, மேற்படி மக்களின் குற்றச்சாட்டுத் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விவிக்னேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிலக்குடியிருப்பு மக்கள், தங்கள் சொந்தப் பணத்தில் வாங்கிய பொலித்தீன் தரப்பாள்களில் கூடாரங்களை போட்டுக் கொண்டு, அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …